இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Friday, June 21, 2013

குட்டிமா. அங்கிளுக்கு நீ வாங்கின ப்ரைஸ் எல்லாம் காட்டு

    பல வருடங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வரும் போது, எங்கள் அம்மா என்னிடம்

    "அல்கேட்ஸ் பையா! மாமா வந்திருக்காரு பாரு"

     குக்ஷியாக ஓடி கடலைமிட்டாயை வாங்கிக்கொண்டு, " உய் யாங்... ஹிஹி" ம்பேன்.

     "மாமாக்கு ஒரு குட்டிக்கரணம் அடிச்சுக்காமி செல்லக்குட்டி"

     "ஏ டுங்காக்கோ" என்றபடி குட்டிக்கரணம் அடித்துக் காட்டுவேன்.

       மாமா, "ஹாஹாஹா. பிரமாதமா குட்டிக்கரணம் அடிக்கிறானே"

       அம்மா, " சரி போய் விளையாடு அல்கேட்ஸ் குட்டி"

        நான் போய் ஓரமாக உக்காந்து என்னோட ஒரே ஒரு குதிரை பொம்மையை வெச்சு வெளயாடிட்டு, தயிர் சாதம் சாப்பிட்டு தூங்கிடுவேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

15 வருடங்களுக்குப் பின்

 நம்ம பெரியக்கா வீடு

    எப்போ அவங்க வீட்டுக்கு போனாலும், "டேய் புத்தா. மாமா வந்திருக்கான் பாரு. கராத்தே செஞ்சு காமி"

    "ஹை. மாமா" என்றபடி ஒடி வருவான்.

    "இந்தாடா சாக்லேட்"

     ஆசையா வாங்கி எல்லோருக்கும் ஊட்டி விடுவான். நல்ல பயல்.

     அக்கா, " டேய். போதும் ஊட்டி விட்டது. கராத்தே பண்ணி காமிக்க போறியா இல்லையா?"

     அவன் ரூமில் உள்ள சேரையெல்லாம் நவுத்தி வெச்சுட்டு ரூமுக்கு நடுவில நின்னு ஆரம்பிப்பான்.

      வெரச்சு நின்னு கைய குறுக்கால மடிச்சு, டக்குனு குணிஞ்சு, ஜப்பானிய வணக்கம் வெச்சான் "ஒயிஸ்"

     அதுக்கே நம்ம பல்பு கழண்டுக்கும்.

     "தாஜ் கத்தா" ன்னு அவன் கைக்குள்ளேயே இன்னொரு கையால குத்து விடுவான். அது தான் அன்னிக்கு அவன் பண்ணப்போற பாடத்தோட பேரு.

      அப்படியே, "ஊ ஹா, ஊ ஹா" ன்னு ரூம் ஃபுல்லா கைய கால ஆட்டிக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுடுவான்.

     2 நிமிக்ஷம் பாத்திட்டு, அக்கா உள்ள போயிடுவா.

     5 நிமிக்ஷம் பாத்திட்டு, நான் அக்கா கூட பேசப்போயிடுவேன்.

    20 நிமிக்ஷம் கழிச்சு வந்து பாத்தா, அவன் இன்னமும் ரூம் ஃபுல்லா சின்சியரா "ஊ ஹா, ஊ ஹா"ன்னுட்டிருப்பான்.

    அடிபடாம நானும் அக்காவும் ஒரமா உக்காருவோம். அவன் முடிச்சான்

    அப்புறம் "டேய் புத்தரே. மாமாக்கு பாட்டுப் பாடி காமி" ன்னா அக்கா.

    அப்படியே ஒரு ஜாக்கிஜான் தரையில சம்மனம் போட்டு உக்காந்து பாட்டு பாடற மாதிரியே இருக்கும்.

     "ஓ  ஓ  , சம்போ ஹரம்போ, ஓ   ஓ, சம்போ ஹரம்போ"ன்னு ஆரம்பிப்பான்.

    அட இதல்லாம் பரவாயில்ல. இன்னும் சின்ன வயசுல ஜண்டவரிசை, சுருளிவரிசையெல்லாம் சொல்லுவான், "சச ரிரி கக மம"ன்னு ஆரம்பிச்சு, வேர்க்க விறுவிறுக்க உச்சஸ்தாயிலே பாடுவான். மூஞ்சில்லாம் சிவந்திடும்.

           நான் உள்ளே அக்காவோட பஜ்ஜி தின்னுகிட்டிருப்பேன்.

        பத்து வருக்ஷம் அவன் பாட்டு, கராத்தே கத்துக்கிட்டான். எப்போ வந்தாலும் எனக்கு எல்லாம் செஞ்சு காமிப்பான். ம்ம்ம்ம். அக்கா பண்ற பஜ்ஜி செம டேஸ்ட்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

3 வருடத்திற்க்குப் பின், 

     பலிங்கிபுரம் சிட்டி, நம்ம சின்னக்கா (பயங்கர tech savvyஆன ஆளு) வீட்டில.

     ஒரே பையன்.

  நான் வந்தோன்னையும் முதல்ல ஃபோட்டோ ஆல்பம்லாம் வரும். அதையெல்லாம் பாத்து முடிச்சா...

  "டேய், பிக் ஜீனியஸ், இங்க வா". அவன் ஒரமா ஃபைவ் ஸ்டார் தின்னுக்கிட்டிருப்பான்.

      "என்னம்மா?" அப்படியே ஆசையா கேப்பான்.

      "மாமா வந்திருக்கான் பாரு. ரைம்ஸ் பாடிக்காமி"

    ரெண்டு ரைம்ஸ் பாடுவான். செம காமெடியா மழலையா இருக்கும். சொல்லி முடிச்சிட்டு பொறுமையா நடந்து போய் முறுக்கு சாப்பிட ஆரம்பிப்பான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து பெரியக்காக்கு பொண்ணு பொறந்திச்சி.

    "அம்முக்குட்டி, மாமா வந்திருக்கான் பாரு. டேய் புத்தா, மாமா வந்திருக்கான். வெளிய வாடா. எப்ப பாரு ரூமுக்குள்ளேயே கெடக்கான்"

     அவன் வெளியே வந்து, "ஹாய் மாம்ஸ்"னு சொல்லிட்டு திரும்ப உள்ள போய் கதவ சாத்திடுவான்.

     அக்கா, "அவன் கெடக்கான். அம்முக்குட்டி (அதான் பேரே, அவ்ளோ செல்லம்) நீ வா"

            "சிக்கிலிபுக்கிலி"ன்னு சிரிச்சுக்கிட்டே வருவா.

            "மாமாக்கு டான்ஸ் பண்ணிக்காமி"

            "ம்ம் முடியாது போ"

           "கண்ணுக்குட்டில.. அம்மா உனக்கு புது பென்சில் பாக்ஸ் வாங்கித்தரேன்"

           "மாட்டேம் போ"

       "ஒழுங்கா பண்ணு. குச்சி எங்க? அடி வேனுமா?". நான் ஒதுங்கி ஒரமாக நின்று விடுவேன்.

            பாப்பா உடனே நடு ஹாலுக்கு வந்து சூப்பரா அபிநயம் பிடிப்பா.

           "என்ன பாட்டுமா?

           "நீயே பாடி, நீயே ஆடு"

         அடப்பாவமே...

       "தோம். ததிகினத்தோம்"ன்னு அவ ரூம் ஃபுல்லா சுத்தி சுத்தி ஆடுவா.

      நான், அக்கா, புத்தர் மூனு பேரும் கிச்சன்ல சுடச்சுட வாழைக்கா பஜ்ஜியும், சூப்பர் காஃஃபியும் குடிச்சுக்கிட்டு பேசிட்டிருப்போம்.

       நான், "அக்கா, இவன் கராத்தேல்லாம் முடிச்சுட்டானா?"

    "முடிச்சுட்டான்டா. ப்ளாக் பெல்ட். அங்க தொங்குது பாரு. பாட்டும் சூப்பரா பாடுறான். சீக்கிரம் அரங்கேற்றம் பண்ணிட வேண்டியது தான்"

     வெளியே ஜங் ஜங்னு குதிக்கிற சத்தம் கேக்கும். கால் மணி நேரம் கழிச்சு பாப்பாவும் பஜ்ஜி சாப்பிட வந்துடும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

4 வருக்ஷம் முன்னால

     பலிங்கிபுரத்துல, நம்ம சின்னக்கா(அதான் tech savvy) க்கு 2வது பையன்.

    முன்னாடில்லாம் ஃபோட்டோ ஆல்பம் வரும். இப்போ டிவில ஃபோட்டோவா ஒடுது.

     "சின்னக்கா. இதை போன தடவ வரும் போதே பாத்தாச்சு."

     "இரு அடுத்த ஃபோட்டோ சிடி போடுறேன்

     "பெரியவன் எங்கே?"

    "மாமாஆஆஆ....."ன்னு பிக் ஜீனியஸ் ஒடி வந்து கட்டி புடுச்சுப்பான். ரெண்டு பேரும் மிச்சர் சாப்பிட ஆரம்பிப்போம்.

       "குட்டி ஜீனியஸ் (சின்னவன்) எங்கே?"

        "தூங்கிட்டிருக்கான். இப்போ ஒன்றை வயசு ஆகுது"

         திடீரென dts எஃபெக்டில் ஒரு சத்தம்..

        "உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......"

        "பய எழுந்துட்டான்" 

         அக்கா அவனிடம், "குட்டி, மாமா வந்துருக்கான் பாரு"

         "உய்ய்ய்ய்ய்ய்"

           அக்கா, "சரி, இந்தா ஃபாரின் சாக்லேட். ஃபேன் எங்கே காட்டு"

       அவன் சாக்லேட்டை பிரித்த படி, இன்ட்ரெஸ்ட் இல்லாமல் மேலே கைக் காட்டினான்.

     அக்கா என்னிடம், "அல். இங்க பாரு ஃப்ளாக்ஷ் கார்ட்ஸ் (flash cards). தேடியலஞ்சு செகண்ட் ஹான்ட்ல வாங்கினேன். பலிங்கிபுரம் சிட்டில யாருக்கிட்டயும் இது கிடையாது"

            நான், "ஓ. இதான் ஃப்ளாக்ஷ் கார்ட்ஸா??"

        "ஆமாம். 10 மாசத்திலேயே இவனுக்கு இதை காம்பிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப பாரேன்"

           "குஜி (குட்டி ஜீனியஸ்). இதுல உராங்குட்டான் எது சொல்லு?"

        அவன் முதலில் என்னைப் பாத்தான், அப்புறம் பெரியவனைப் பாத்தான், அப்புறம் அவன் அம்மாவை. எனக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. ஒரு கார்டை தொட்டான்.

            "பார்றா!!!", நான்.

              அக்கா, "பெலிக்கன் பறவை எது?"

              ஒரு கரண்டி வாத்து பறவை இருக்கிற கார்டைக் காட்டினான்.

              நான் "இதான் பெலிக்கனா? சரி சரி" ன்னேன்.

           "அல். இவன் 100 நாட்டு தேசிய கொடிய கரெக்டா சொல்லுவான் பாரு. குஜீம்மா, அஸெர்பெய்ஜான் நாட்டுக்கொடி எங்க இருக்கு?"

               ஏதோ ஒரு flagகைக் காட்டினான்.

          பிக் ஜீனியஸ், "கரெக்ட்டா சொல்லிட்டான்மா" ன்னான். பெரியவனை நான் முறைச்சேன்.

     (அஸெர்பெய்ஜானா? நமக்கு வலம்புரி ஜானைத்தான் தெரியும். என்ன குடும்பம்டா இது!! ஆங். நாம மட்டும் பொது அறிவில கொறஞ்சவனா என்ன?)

               நான், "ஆப்பிரிக்கா கொடிய காட்டு"ன்னேன்.

              எல்லாரும் என்னையே மொறச்சாங்க.

         அக்கா என்னிடம், "ஆப்பிரிக்கால எந்த நாட்டைக்கேக்குற? அங்கயே 60 நாடுங்க இருக்கு"

              (அப்போ ஆப்பிரிக்கானா நாடு இல்லையா. சரி, பேச்ச மாத்துவோம்)

             "வேற என்னலாம் தெரியும்?"ன்னேன்.

      அக்கா நமட்டுச்சிரிப்புடன் "குஜீக்கண்ணு, மாமாக்கு விரல் வித்தைக்காட்டு".

     (ஹஹ, இதான் நமக்கு தெரியுமே. விரல் வித்தை தம்பியே நம்ம ஊரு தான)

   "டொய்ங்ங்ங்" என்றபடி, இரண்டு விரலால் என் கண்ணு ரெண்டையும் குத்தினான்.

       "அய்யோ அம்மா" என ஒட்டம் பிடிச்சேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
2 வருடம் கழித்து அதே வீட்டில்

           பெரியவன் ஒடி வந்து கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்தான். "செல்ல மாமா. ஐ மிஸ் யூ"

           பாசக்காரப் பய. நம்மளையே கலங்க வைக்கறானே

         சின்னக்காவிடம் கொஞ்சம் பம்மலாய், "சின்னவன் எங்கே?"

        "உள்ள இருக்கான். கூப்டவா?"

         நான் ரெண்டு ஸ்டெப் பின்வாங்கி, "வேணாம், வேணாம்"ன்னேன்.

         அக்கா, "வா நாம அங்க போவாம்" (விடமாட்ராங்களே)

      அவன் எதோடையோ விளையாடிட்ரருந்தான். கம்பி கம்பியா, அதுல கலர் கலரா பால் வேற. அங்கயும் இங்கயும் பாலைத் தள்ளி தள்ளி வெளயாடணும்.

          அக்கா, "குஜீ. 3787ம் 434ம் எவ்வளவு?"

        அவன் அந்த பாலையெல்லாம் அங்கயும் இங்கயும் நவுத்தினான். "16,43,558" ன்னான்.

        தூக்கி வாரிப் போட்டுது. செல்ஃபோன்ல செக் பண்ணிப் பாத்தா, கரெக்ட்.

         அக்கா "அல், இதான் அபாகஸ்"ன்னா. 
        
    "அக்கா, என்க்கு சிட்டில கொஞ்சம் வேலயிருக்கு. சாயங்காலம் வரேன்"ன்னு சொல்லி அபிட்டு ஆனேன்.

அன்று இரவு

      "சின்னவன் தூங்கிட்டானா?"

   அக்கா, "இல்ல. அந்த ரூம்ல கம்ப்யூட்டர்ல பேபி ரைம்ஸ் பாத்துட்டிருக்கான்"

       "அதுக்குள்ளயே கம்ப்யூட்டர்லாம் ஆபரேட் பண்ணுவானா?"

        "இல்ல, நான் போட்டு விடுவேன். அவன் பாப்பான்." 

        "ரைம்ஸ் பாட்டெல்லாம் எங்க கிடைச்சுது?"ன்னேன்.

        "முன்னாடி ஒருத்தர் ஃபாரின்லேந்து வாங்குவார். நாங்க சிடி காப்பி போட்டுப்போம், இப்போ யு ட்யூப் டவுண்லோடு தான்" 

         "நீங்க பெரியாளுங்கந் தாம்ப்பா"

         "டேய் குட்டி ஜீனியஸ், மாமா வந்துருக்கான். இங்க வாடா"

          அவன்,  "வரமாட்டேன்".

           "அம்மா உன்ன 'தண்டர் மா' தீம் பார்க்குக்கு கூட்டிட்டு போறேன், வாடா செல்லம். பீட்ஸாவும் வாங்கித்தரேன்"
          
           "பேட்டரி கார் வாங்கித் தரயா?"

            நான், "நான் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு" என்று குட்டி காரை எடுத்து காமிச்சேன்.

              அக்கா, "அல், அவன் கேக்குறது, அவன் ஒட்ற மாதிரி பெரிய கார். 12,000 ரூவா". அவனிடம் "சரி அழுது தொலைக்கிறேன். வா"

                அவன் என்னிடம் வந்து, "உன் செல் தா" ன்னான்.

      "இந்தா"ன்னு புதுசா வாங்கின ஆன்ட்ராயிடைக் கொடுத்தேன். படம் பாப்பானா இருக்கும்.

      திருப்பித் தந்தான். ஃபோன் லாங்குவேஜை மாத்திட்டான். அய்யோ. செட்டிங்ஸ்க்கு சைனீஸ்ல என்ன? எங்க இருக்கு?

               அவன், என்னைப்பாத்து, "ஹிஹிஹி"

                "டேய் தம்பி, மாத்திக்குடுடா"

                 "குஜீ, என்ன வெளயாட்டு. மாத்திக்கொடு" என்று அக்கா மிரட்டினாள். 

       "மாட்டேன். பாம் பண்றதுக்கு, எல்லா அயிட்டத்தையும் வாங்கிக் கொடுத்தா தான் மாத்துவேன்"

              அப்புறம் சைனா மொபைல் விக்கிறவனிடம் போனேன். "ஹலோ நாங்க சைனா மொபைல் விக்கிறோம் தான். அதுக்காக சைனீஸ் எல்லாம் தெரியாது"

                  கம்பெனிக்காரனிடம் கொடுத்து செட்டிங்ஸ் மாத்தினேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ, நம்ம வீடு

      நம்ம 3 வயசு சுட்டிக்கு, வீட்டுக்காரங்க யு ட்யூப்ல "பூனையாரே பூனையாரே" பாட்டு போட்டு ஊட்டி விட்டுட்டு இருந்தாங்க. நடுவில ஒரு பழய மொபைலையும் சப்பிக்கிட்டிருந்தான்.

      இரண்டு அக்காவும் வந்திருந்தாங்க.

      பெரியக்கா, "குட்டிப்பையா, புஜ்ஜிக்கண்ணு, உனக்கு என்னலாம் தெரியும்" ன்னாங்க.

         நான், "லட்டு (அதான் பேரே), அத்தைக்கு ஃபேன் எங்க இருக்கு காமி"

         சந்தோக்ஷமா மேல கைய காமிச்சான்.

         அக்கா, "3 வயசுல தான் ஃபேனைக் காட்டுறானா??? லட்டும்மா, வேற என்ன தெரியும், சொல்லு"

          அவன், "ஏஏஏ டுங்காக்கோ"ன்னு சூப்பரா ஒரு குட்டிக்கரணம் அடிச்சான்.

23 comments:

 1. ஆஹா..குஜு க்கு அபாகஸ் எல்லாம் தெரியுமா..ஆஹா..அது அந்த அக்காக்கு தெரியுமா ?

  ReplyDelete
 2. Hi Hari,

  I am astonished with your writing! I ( to be honest all our friends) never realized that such a great writer hidden with Dr.Hariharan!!

  I completely agree with you that we ( Late Gen X & early Gen Y) people, are far more behind the late Gen Y and Gen Zs)!

  I can see a upcoming Devan In you, all the best!!

  ReplyDelete
 3. Haaa .. Haaaaaa... Nice da macahan.... Mappi ennakaga oru thadavai ippo oru Kuttikaranam adichi kanbi da... :-)

  ReplyDelete
 4. அருமை.
  நன்றி.

  ReplyDelete
 5. //அவன், "ஏஏஏ டுங்காக்கோ"ன்னு சூப்பரா ஒரு குட்டிக்கரணம் அடிச்சான்.//

  புலிக்குப் பொறந்தது பூனையாகுமா!? :)))))))))

  ReplyDelete
 6. ஹா...ஹா.... வாய்விட்டு சிரிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை :D

  ReplyDelete
 7. மச்சான்..குடும்ப ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு......................சு...சு...

  ReplyDelete
 8. ஹா...ஹா....ஹா...ஹா.... அருமை

  ReplyDelete
 9. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு...செம செம.....அக்காங்களைக் கலாய்க்க ப்ளாக் நல்ல டெக்னிக்....ஏஏஏ டுங்காக்கோ வை கற்பனை பண்ணிப் பண்ணிச் சிரிச்சுக்கிட்டிருக்கேன்!!!

  நித்யா ரமேஷ்.

  ReplyDelete
 10. super hari....awesome narration..keep flowing

  chelli

  ReplyDelete
 11. டாக்டர்.....சிகிச்சை,, நல்லாயிருக்கு..!
  கொஞ்சம் ரத்தமும் வருது....
  ஓ..
  அதில்தான் உங்க வெற்றியே அடங்கியிருக்கோ..?!
  தொடருங்கள்..!

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. அட்டகாசம் :-)


  -கார்கி  ReplyDelete
 14. wonderful . couldnt stop laughing out loud [ even though I was in office ]

  ReplyDelete
 15. வாழ்க்கையே ஒரு வட்டம்னு ஜாலியா சொல்லிருக்கீங்க. நல்லாருக்கு.

  ReplyDelete
 16. //அவன், "ஏஏஏ டுங்காக்கோ"ன்னு சூப்பரா ஒரு குட்டிக்கரணம் அடிச்சான்.//

  மறுபடியும் முதல் ல இருந்தா ?

  ha ha ha ....Nice writing sir :)

  ReplyDelete
 17. guys all these are trailer only main picture will be marvellous

  ReplyDelete
 18. ரொம்ப அருமைங்க 👏👏👏 நான் google ல ஜண்டவரிசை தேடினேன் உங்களைக் கண்டு பிடிச்சேன். எனக்கு என் தம்பிங்க ஞாபகமெல்லாம் வந்தது 🤣🤣🤣 நாமும் இப்படி தானே அவங்களை பாடாய் படுத்திணோம் னு 😂. Subscribing your site, keep writing like this 👍

  ReplyDelete