இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Wednesday, June 26, 2013

இவ்விடம் கல் உடைக்கப்படும்; செங்கல், ஜல்லி, மற்றும் கிட்னிக்கல்


நன்றி வல்லமை.com

நமது கிளினிக்கில் பிஸியான ஒரு மாலைப்பொழுது
நர்ஸ் 30 ஈ அடித்திருந்தார். நான் ஈ அடிப்பதா?? என் கௌரவம் என்னாவரது. அதனால் கொசு அடித்துக் கொண்டிருந்தேன். 18…….19……
வணக்கம் ஐயா
ஐயாவா? சரி அரசியல் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியதான்.
ஹிஹி வணக்கம், வணக்கம். வாங்க, வாங்க. உக்காருங்க. நீங்களும் உக்காருங்க மேடம்”. தம்பி அல்கேட்சு. ரொம்ப கொழயாத. நீ ஆளில்லாம கொசு அடிக்கிறது தெரிஞ்சிட போவுது.
ஐயா, என்னோட பேரு சிக்குன சடை. நீங்கள் நலமா, உங்க குடும்ப அண்பர்கள் நலமா? உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு?”ன்னார்.
பரவாயில்ல சார். எனக்கு தான் அப்பப்போ லைட்டா முதுகு வலி வருது. கொஞசம் செரிமானமும் சரியில்ல”. (டேய் அல்கேட்ஸ்! நம்மளை பேக்ஷண்ட் ஆக்கிட்டு அவரு டாக்டர் ஆகப் பாக்குறாரு. சுதாரி...)
க்கூம்.. என்ன ப்ராப்ளம்?”ன்னேன்.
ஐயா, எனக்கு பின் இடுப்புல வலி. பின்னாடிலேந்து முன்னாடி வருது”.
வரக் கூடாதே.....எத்தன நாளா?”
மூனு நாளுங்க
கீழ் முதுகை அழுத்தி, “இங்க வலிக்குதா?”
ஆஆ. ஆமாய்யா. நீங்க அழுத்தும் போது அதிகமாவுது”.
ஒகே. இந்த வலி எங்கயாவது பரவுதா?”
ஆமா. அப்படியே முன்னால வந்து விரை வரையும் பரவுது”. (தயவு செஞ்சு படிக்கிறத நிறுத்தாதீங்க. வல்காரிட்டி கிடையாது. இது பல பேருக்கு, உண்மையாக இருக்கும் பிரச்சினை. பேக்ஷண்ட்ஸ் அப்படித் தான் சொல்லுவாங்க. வலி அவங்கவங்களுக்கு வந்தா தானே தெரியும்).
அப்படியா, சரி தான்.
ஒகே. உங்களுக்கு கிட்னில கல்லு இருக்கு”.
அவர், வீட்டுக்காரங்களைப் பாத்து, “பாத்தியாடி. பக்கத்து வீட்டுல, இவரை சொப்ப மருத்துவர்ன்னு சொன்னாங்களே. கரெக்டா கண்டுபுடிச்சிட்டாரு பாருன்னார், என்னிடம், “மிகச் சரியாக கண்டு புடிச்சிட்டீங்க மருத்துவரே”.
ஒ. அப்ப இது முன்னாடியே தெரியுமா?”
இதுக்கு முன்னாடி, 3 சிறுநீர் குழாய் மருத்துவர்களோட கருத்தும் இதே தானய்யா
3  யூராலஜிஸ்ட்டா? அப்போ இந்த ப்ராப்ளம் ரொம்ப நாளா இருக்கா?”
4 வருக்ஷமாக ஐயா”.
இதுல ஐயாவேற. ஓ. அவரா இவரு??? தமிழ் சகளை!! வியாதிய புதுசா கண்டுபிடிச்சு பேர் வாங்கலாம்னா, நம்ம கரெக்டா கண்டுபிடிக்கிறோமான்னு டெஸ்டிங் பண்றாரே. இன்னிக்கு அம்பது ருவா கொடுக்குறத்துக்கு ஒரு மணி நேரம் பில்டப் போட்டு பேசப் போறார், சரி கடமைய செய்வோம்.
ஒகேங்க சார். நாலு வருக்ஷமா கிட்னில கல்லு. என்ன ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கீங்க?”
மொதல்ல, சின்ன வாளி ஊர்ல, மருத்துவர் நரிமூலத்துக்கிட்ட பாத்தேன். அவர் தான் சிறுநீரகக் கல்னு கண்டுபுடிச்சார், அவரு மாத்திரையும் தண்ணி மருந்தும் குடுத்தார். தக்காளிய வெதய நீக்குன பின்னாடி தான் சாப்பிடணும்னார்
ஈஙு. நரிமூலமா? சின்ன வாளி டவுன்ல பெரிய யூராலஜிஸ்ட் ஆச்சே”.
ஆமா, ஆனா அவரு மருந்து கொடுத்து சரியாவல. அப்புறம் மருத்துவர் சின்னத்தூள் கிட்ட காமிச்சேன். அவரு, 5 பாட்டில் உப்புத்தண்ணி (ஸலைன்) ஏத்தி, வேகமா ஒன்னுக்கு வர ஊசி போட்டார். முட்டிக்கிட்டு சிறுநீர் கழிச்சா கல்லு அடிச்சிக்கிட்டு வெளியேறும்னாரு, வெளியேறல. அப்புறம் மாத்திரையும், தண்ணி மருந்தும் கொடுத்தார்.
கரெக்ட். ஸலைன் ட்ரீட்மெண்ட். அதான் அடுத்த ஸ்டெப். திரும்ப அவருக்கிட்ட போனீங்களா?”
இல்லய்யா, சரியாவலயே! அதனால மாத்திட்டேன். அப்புறம் மதிப்பிற்குறிய, மருத்துவர் வெட்டி சிலந்திய பாத்தேன்.
ஈஙு. சிலந்தியா? அய்யோ, அவரு தமிழ்நாட்லயே ஃபேமஸ் யூராலஜிஸ்ட் ஆச்சே”. இவரு எதுக்கு என்க்கிட்ட வந்துருக்கார்? வீட்ல பொழுது போகலன்னு பேச வந்திருக்காரா?
சிறுநீரகக் கல்லு பெருசா இருக்கு, மருந்துல கரையாதுன்னார்.
ஆமா. 5 மில்லிமீட்டர் சைஸ் கல்லு தான் மருந்தில கரையும். அதுக்கு மேல இருந்தா கரையாது
ஆமா. அதுக்கு ஒரு வைத்தியம் பண்ணனும்னார்”.
என்ன வைத்தியம்?”
அவர், வீட்டுக்காரங்கள மொறச்சார். துணைவி வெளுத்த தேங்காய், அந்த வைத்தியத்த சொல்லு
அவங்க, “லித்தோட்ரிப்ஸி பண்ணனும்னு சொன்னார் சார். லித்தோட்ரிப்ஸிக்கு தமிழ் கெடயாது பாருங்க. அதான் என்னைச் சொல்ல சொன்னார்”.
சரி தான், ஐயாவுக்கு மொழிப் பற்று முத்திப்போச்சு போல.
அவர், ”நன்றி துணைவி. ஆனா அப்போ பணம் இல்லாததினால, முடியாதுய்யானேன். அப்புறம் மாத்திரையும் தண்ணி மருந்தும் எழுதிக் கொடுத்தார். 
அலுப்புடன், ”வேற என்ன சொன்னார்?”னேன்.
பால் சாப்பிடாதீங்க, சுண்ணாம்புச் சத்து சேந்தா கல்லு பெரிசாயிடும், அதனால தேநீரும், கொட்டை வடிநீரும் குடிக்கச் சொன்னார். அடப்போங்கையா! தமிழ் கோட்பாடுல, அதெல்லாம் அந்நியரோடது. நான் சாப்பிடுறதே பால், சோறு, காய்கறிகளின்னால சமையல், கவுச்சி, முட்டை தான். அந்நிய பொருளை தொடுறது இல்ல. நாம என்ன அவன்களுக்கு அடிமையா?”ன்னு சூடாயிட்டார்.
ஆமா, இதெல்லாம் பேசுங்க. வைத்தியத்துக்கு மட்டும் இங்கிலீக்ஷ் டாக்டர்ட்ட வந்து, வெள்ளக்காரன் கண்டுபுடிச்ச மாத்திரையா முழுங்குங்க. அய்யோ, இன்னிக்குப் பாத்து ஆறு பேர் வந்துருக்காங்களே. முந்நூறு ருவா. சீக்கிரம் முடிடா அல்.
சரி சார், ஆறு மில்லிமீட்டர் கல்லுனு பழைய ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது. அதுவும் கிட்னில இல்ல. யூரேட்டர்ல இருக்கு. அதாவது கிட்னிலேந்து நீர் வெளியேருற குழாய்ல சிக்கி இருக்கு. அதான் வலி பரவுது. லித்தோட்ரிப்ஸி தான் கடைசி ஆப்க்ஷன்
அப்படியா மருத்துவர் அவர்களே!
பேரு கெட்டாலும் பரவால்ல, இவர அடிடா அல்கேட்சு, ஏதோ கட்சி மீட்டிங் மாதிரி பேசுறாரு.
ஆமா சார். வேற வழியில்ல. கல்லு பெரிசாயிடிச்சி. எறங்கிடிச்சி வேற. இன்னும் எறங்குச்சுனா வலி ஜாஸ்தியாயிடும், யூரின்ல ப்ளட் கூட வரலாம்
நானும் பாத்து பாத்து அலுத்துட்டேன் ஐயா. அந்த சிகிச்சை பண்ணிக்குறேன்”.
ரைட்”. நான் ஃபோனை டயல் பண்ணி, நம்ம சிட்டில பெரியாளான ஈஙு.யானை முடிக்கு பேசினேன், “சார், குட் ஈவினிங் சார், நான் அல்கேட்ஸ் பேசுறேன். நம்ம வண்டிய நாளைக்கு சாயங்காலம், ஒரு ஆறரை மணிக்கு அணுப்பிடுங்க. ஆமா சார். எறங்கிடிச்சி, 6 மில்லிமீட்டர். உடைக்கணும். வண்டி சர்வீஸ் ஆயிடிச்சில்ல? ஒகே சார். அனுப்பிடுங்கன்னேன்.
சிக்குன சடை பேயறஞ்ச மாதிரி ஆயிட்டார். என்ன வண்டி சார்?”
சாரா? நான், ’ஐயாவாக்கும். நாளைக்கு ஆறரைக்கு உங்க கல்லை ஒடைக்கிறோம். கத்தியில்லாம, ரத்தமில்லாம, வலி இல்லாம. 20,000 கொண்டாந்திடுங்க”.
பயத்துடன், “அப்படியா, சரிங்கையா
தம்பி, பாத்து ரிவர்ஸ் எடு. சாக்கடைல வுட்றப் போறன்னு மெடிக்கல க்ஷாப் ஒனர் வண்டிய கைடு பண்ணினார்.
நான், “மிஸ்டர் சிக்குன சடை, தமிழய்யா, இங்க வாங்க
அவர் நடுங்கிக் கொண்டே வந்தார். குட் ஈவினிங் சார், என்ன பெரிய பஸ் ஒன்னு வந்திருக்கு?”
சார். லித்தோட்ரிப்ஸி ஒரு கோடி ருபா மிக்ஷின். எல்லாராலையும் வாங்க முடியாது. பேக்ஷண்ட்ஸ் அங்க ஒன்னு இங்கொன்னுன்னு தான் இருப்பாங்க. ஈஙு. யானை முடி, ஒரு ஐடியா பண்ணி, லோன் போட்டு, இந்த மெக்ஷினை வாங்கி, ஒரு பஸ்சுக்குள்ள அடைச்சிட்டார். இதுக்காக ஒரு பில்டிங் கட்ட வேணாம் பாருங்க. எங்க வேணுன்னாலும் எடுத்துக் கிட்டு போலாம். நம்மள மாதிரி, சிட்டிக்கு வெளியே இருக்குற இடத்துக்கும் போய் ஈஸியா கல்லு உடைக்கலாம். இது புடிக்கலைன்னா, நீங்க 15 கிலோ மீட்டர் போய், அழி ரப்பர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிடுங்க. நாலு நாள் அட்மிக்ஷன், டோட்டலா 60,000 வரும். என்ன இங்க பண்ணலாமா? இல்ல அழி ரப்பருக்கு போறீங்களா?”
அவர் கன்வின்ஸ் ஆகி, பஸ் கிட்ட போனார்.
கல் ஒடைக்கிறதுல்லாம் ஏறு”. அடப்பாவி, மெக்ஷின் டெக்னீக்ஷியன், கண்டக்டர் லெவலுக்கு கூவறானே!!
தம்பி, எனக்கு கல்லு ஒடைக்கணும்”.
டிக்கட், ச்சி, டாக்டரோட சீட்டு இருக்கா?”ன்னான்.
இங்க பாரு, ஈஙு.அல்கேட்ஸ் சீட்டு
சரி,  உள்ள ஏறிப் படுங்க
உள்ளே
சார். அந்த பெட்ல இருக்குற வளையத்துல இடுப்ப வச்சிப் படுங்க, அதுல போய் தலை வச்சிப்படுத்துருக்கீங்க? அப்புறம் மூளைக் கல்லு தான் உடையும். ஹாஹாஹா
சரி தம்பி
ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக்
ஒகே சார், நீங்க போவலாம்
அவர் என்னிடம் வந்து, “சார், கல்ல ஒடைச்சாச்சா, எனக்கு ஒன்னும் தெரியலயியே
இப்ப தெரியாது. நாளைக்கு, கல்லு பொடிப்பொடியா வெளியே வரும்
எப்படி?”
சார், உங்களுக்கு என்ன தொண்டைலயா கல்லு? சிவலிங்கம் மாதிரி வாயிலேந்து வரகிட்னிக் கல்லு சார். இத்தன நேரம் அது அல்ட்ரா சவுண்ட் வேவ்ல பொடியாகியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா யூரின்ல ஃபுல்லா வெளியேரும்”.
அப்படியா அய்யா, மிக்க நன்றி
ஐயா திரும்ப வந்திடிச்சா? பிரச்சினை இல்லாதப்போ இப்படி பேசுறாரு. சொந்தமா ஒரு பிரச்சினைனோனையும், கொள்கையெல்லாம் காத்துல பறந்துடுது. பிரச்சினை போன உடனே, பழய புத்தி உடனே வந்திடுதே.
சரி, சிஸ்டர் வெளிய இருக்காங்க. 20,000 குடுத்துட்டு கெளம்புங்க. ஆல் தி பெஸ்ட்
சரி ஐயான்னு போயிட்டாங்க.
ஈஙு. யானைமுடிக் கிட்ட சொல்லி, “கிட்னிக் கல்: புதைந்திருக்கும் பொக்கிக்ஷம்புக்க வாங்கித் தர சொல்லணும். இவ்ளோ பேக்ஷண்ட் அனுப்பி இருக்கேனே.
சார், சார் சார்”, அந்த டெக்னீக்ஷியன் ஒடி வந்தார்.
என்னயா?”
சார், அவருக்கு பண்ணும் போது மிக்ஷின் ரிப்பேர் ஆகி, ஃப்ரீக்குவென்ஸி ஜாஸ்தியாயிடிச்சி. சுத்தி உள்ள சில கல்லும் ஒடஞ்சிருக்கும்”.
நான் சுத்திமுத்திப் பாத்தேன், “அடப்பாவி, என் மார்பிள் புள்ளையார் எங்கயா?”
அவன் மேஜை மேலிருந்த மண்ணைக்காட்டி, “தோ இருக்கு சார்ன்னான்.
அடுத்த நாள், தமிழய்யா, சிக்குன சடை வந்திருந்தார்.
வாங்க, உக்காருங்க, இப்ப எப்படி இருக்கு?”
சார். நான் ஜெம்ஸ் அண்ட் ஜீவல்சில், ஜாதகத்தை குடுத்து, சஃபையர் மோதிரம் வாங்கினேன். இப்போ மோதிரம் இருக்கு, சஃபையரைக் காணல”.
என்ன பண்றது, சரி சமாளிப்போம். நான், “ஐயா, சஃபையர் என்பது நம்மை பன்நெடுங்காலமாக, பரங்கியர் நம்மை அடிமைப்படுத்த உண்டாக்கிய சொல். வைர, வைடூரியம், மரகதப் பச்சை இருக்கும் போது, உமக்கு ஏனையா ஆங்கில சஃபையர் மோகம்?”ன்னு ஒரு போடு போட்டேன்.
சட்டுனு சுதாரிச்சு, “ஆம் ஐயா. இருந்தாலும், அது விலை அதிகமாச்சே?”
ஐயா, நீங்கள் தமிழ் தமிழ்என கூறுகிறீர்கள், ஆனால் தங்கள் மனதின் அடியாழத்தில் ஆங்கில மனோபாவம் புதைந்திருக்கிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அது வந்து, கல்லு வெல ஜாஸ்தி…..”
சபையர். அதாவது போட்டுக் கொள்பவரை, ’சப்பையர் ஆக்கி விடுகிறது”. மேலே பாத்து, “அம்மா மாரி, என்று தான் நீ உண்மையான தமிழனுக்கு நல்வழிக் காட்டப் போகிறாயோ?”
அது வந்து….”னு அவர் அப்படியே போயிட்டார். நான் வேர்வையை துடைத்துக் கொண்டேன்.
3 வருக்ஷம் கழிச்சு….
ஈஙு. யானைமுடி சார். ஈஙு. அல்கேட்ஸ் பேசறேன். எனக்கு கிட்னில கல்லு. 7மிமீ, ஒடைக்கணும்”.
அட நீங்க எவ்ளோ பேர் அனுப்பிருக்கீங்க. உங்களுக்கு ஃபீஸ் கம்மி தான்
தாங்க்ஸ் சார்
அக்கவுண்ட் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ல, 43,000 ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. லாரி, ச்சீ, எக்யூப்மெண்ட் வீடு தேடி வரும்”.
சார், அல்மோஸ்ட் 30 பேக்ஷண்ட் அனுப்பியிருக்கேன், 43,000மா?”
புரியாம பேசாதீங்க அல்கேட்ஸ். விலை வாசி, டீசல் வெல ஏறிப்போச்சு. அழி ரப்பர் ஹாஸ்ப்பிட்டல் போய்ப் பாருங்க, 1,40,000 ஆகும். எப்படி வசதி?”
வண்டிய அனுப்புங்க சார்
டெக்னீக்ஷியன், “சார், ஃப்ரிக்குவென்சி கம்மியாயிடிச்சி, கல்லு ஒடஞ்சிருக்காது
யோவ். கல்ல ஒடைக்கல, ஒன்ன ஜெயில்ல களி திங்க வெச்சுருவேன். சொளையா 43,000 கொடுத்திருக்கேன். ஒட மொதல்ல
ட்ரிங்க் டிக் ட்ரிங்க் டிக் ட்ரிங்ங்ங்ங்….. டகடும் டகடும் கொய்ங்ங்ங்
டகடும் கொய்ங்கா? வித்தியாசமா இருக்கு?
சார், உங்க வீட்டை ஒடச்சிட்டோம். ஸாரி
ஒருத்தர் வந்தாரு, ”வணக்கம் சார்
வாங்க ஒக்காருங்கனேன். சோகமாக, வீடு போச்சே….
சார், நான் முன்னாடி வைர யாவாரம் பாத்துக்கிட்டுருந்தேன். அப்புறம் ஒரு கன்ஸைன்மெண்ட்டுல தண்ணி பூந்த வைரமா அனுப்பிட்டாங்க. நொடிச்சு போச்சு. இப்ப தான் பழைய லாரி வாங்கி ஜல்லி லோடு அடிக்கிறேன்”.
இவரு பேக்ஷண்ட் இல்லயா, “ஒகே
நேத்திக்கு உங்க வீட்டு முன்னாடி ஒரு வண்டியப் பாத்தேன். ஏதோ கல்லு உடைக்கிறதுனு பேசிக்கிட்டாங்க. சார். அதான் நம்ம ஒரு பிஸினஸ் பேசலாம்னு வந்தேன். நம்மக் கிட்ட பாறை 8 டன் இருக்கு. அத 6ஙிஙி க்கு ஒடைக்க எவ்ளோ ஆகும்
ஹலோ ஒரு கல்லு உடைக்க 43,000 ருவா
அவரு அதிர்ச்சியாகி, “அப்படி என்ன கல்லு சார்?”
கிட்னிக் கல்லு. உடம்புல கிட்னிக் கல்லு, பித்தப் பை கல்லுனு நெறய இருக்கு. இங்க பாருங்கன்னு என் கிட்ட இருந்த சில பித்தப் பை கல்லைக் காட்டினேன். நீங்களே வெச்சுக்குங்க”.
5 வருக்ஷம் கழிச்சு,
கிளினிக் வாசலில் ஒரு பி.எம்.டபிள்யு கார் வந்துது.
பார்றா. நம்ம கைராசிக்கு பெரிய ஆளுங்கல்லாம் வராங்க….
ஒருத்தர் அப்படியே பளபளன்னு வராரு. அப்படியே தகதகங்குது.
வணக்கம் சார், உக்காருங்கன்னேன்.
சார் என்ன தெரியலியா, நான் தான் ஜல்லி லாரி டிரைவர்
யாரு……..?”
நீங்க அன்னிக்கு கல்லு கொடுத்தீங்கல்ல? அதக் கொண்டு போய் ஒரு சேட்டு கிட்ட காட்டினேன். அவரு இது என்னா பளபளன்னு இருக்கு. பல க்ஷேப்லையும் இருக்குன்னு பாத்தார். யானை, கூஜா, மான் கொம்பு மாதிரி. அப்புறம் கண்டு புடிச்சேன். இது முத்து மாதிரி. உடம்புக்குள்ளே இருந்துட்டு இருக்கிற முத்து. அப்புறம் எல்லா ஆஸ்பத்திரிக்கும் போயி அங்க கிட்னிக் கல்லு, பித்தப்பைக் கல்லு ஆபரேக்ஷன் நடக்கும் போது கல்லை வாங்கியாந்துடுவேன். இப்போ லண்டன்ல இருக்குற, இண்டர்நேக்ஷனல் ரேர் ஸ்டோன்ஸ் மியூசியத்துல கூட நம்ம கல்லு நாலு இருக்கு. ஸ்டோன் கலெக்ட்டர்ஸ் நல்ல ரேட்டு குடுத்து வாங்கிப்பாங்க. நம்ம ஹெட் ஆபிஸ் ஜுரிச்ல. எல்லாம் உங்கள்ட்டேந்து ஆரம்பிச்சது. புது வீடு கட்டியாச்சா? வரேன் சார்”.

Friday, June 21, 2013

குட்டிமா. அங்கிளுக்கு நீ வாங்கின ப்ரைஸ் எல்லாம் காட்டு

    பல வருடங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வரும் போது, எங்கள் அம்மா என்னிடம்

    "அல்கேட்ஸ் பையா! மாமா வந்திருக்காரு பாரு"

     குக்ஷியாக ஓடி கடலைமிட்டாயை வாங்கிக்கொண்டு, " உய் யாங்... ஹிஹி" ம்பேன்.

     "மாமாக்கு ஒரு குட்டிக்கரணம் அடிச்சுக்காமி செல்லக்குட்டி"

     "ஏ டுங்காக்கோ" என்றபடி குட்டிக்கரணம் அடித்துக் காட்டுவேன்.

       மாமா, "ஹாஹாஹா. பிரமாதமா குட்டிக்கரணம் அடிக்கிறானே"

       அம்மா, " சரி போய் விளையாடு அல்கேட்ஸ் குட்டி"

        நான் போய் ஓரமாக உக்காந்து என்னோட ஒரே ஒரு குதிரை பொம்மையை வெச்சு வெளயாடிட்டு, தயிர் சாதம் சாப்பிட்டு தூங்கிடுவேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

15 வருடங்களுக்குப் பின்

 நம்ம பெரியக்கா வீடு

    எப்போ அவங்க வீட்டுக்கு போனாலும், "டேய் புத்தா. மாமா வந்திருக்கான் பாரு. கராத்தே செஞ்சு காமி"

    "ஹை. மாமா" என்றபடி ஒடி வருவான்.

    "இந்தாடா சாக்லேட்"

     ஆசையா வாங்கி எல்லோருக்கும் ஊட்டி விடுவான். நல்ல பயல்.

     அக்கா, " டேய். போதும் ஊட்டி விட்டது. கராத்தே பண்ணி காமிக்க போறியா இல்லையா?"

     அவன் ரூமில் உள்ள சேரையெல்லாம் நவுத்தி வெச்சுட்டு ரூமுக்கு நடுவில நின்னு ஆரம்பிப்பான்.

      வெரச்சு நின்னு கைய குறுக்கால மடிச்சு, டக்குனு குணிஞ்சு, ஜப்பானிய வணக்கம் வெச்சான் "ஒயிஸ்"

     அதுக்கே நம்ம பல்பு கழண்டுக்கும்.

     "தாஜ் கத்தா" ன்னு அவன் கைக்குள்ளேயே இன்னொரு கையால குத்து விடுவான். அது தான் அன்னிக்கு அவன் பண்ணப்போற பாடத்தோட பேரு.

      அப்படியே, "ஊ ஹா, ஊ ஹா" ன்னு ரூம் ஃபுல்லா கைய கால ஆட்டிக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுடுவான்.

     2 நிமிக்ஷம் பாத்திட்டு, அக்கா உள்ள போயிடுவா.

     5 நிமிக்ஷம் பாத்திட்டு, நான் அக்கா கூட பேசப்போயிடுவேன்.

    20 நிமிக்ஷம் கழிச்சு வந்து பாத்தா, அவன் இன்னமும் ரூம் ஃபுல்லா சின்சியரா "ஊ ஹா, ஊ ஹா"ன்னுட்டிருப்பான்.

    அடிபடாம நானும் அக்காவும் ஒரமா உக்காருவோம். அவன் முடிச்சான்

    அப்புறம் "டேய் புத்தரே. மாமாக்கு பாட்டுப் பாடி காமி" ன்னா அக்கா.

    அப்படியே ஒரு ஜாக்கிஜான் தரையில சம்மனம் போட்டு உக்காந்து பாட்டு பாடற மாதிரியே இருக்கும்.

     "ஓ  ஓ  , சம்போ ஹரம்போ, ஓ   ஓ, சம்போ ஹரம்போ"ன்னு ஆரம்பிப்பான்.

    அட இதல்லாம் பரவாயில்ல. இன்னும் சின்ன வயசுல ஜண்டவரிசை, சுருளிவரிசையெல்லாம் சொல்லுவான், "சச ரிரி கக மம"ன்னு ஆரம்பிச்சு, வேர்க்க விறுவிறுக்க உச்சஸ்தாயிலே பாடுவான். மூஞ்சில்லாம் சிவந்திடும்.

           நான் உள்ளே அக்காவோட பஜ்ஜி தின்னுகிட்டிருப்பேன்.

        பத்து வருக்ஷம் அவன் பாட்டு, கராத்தே கத்துக்கிட்டான். எப்போ வந்தாலும் எனக்கு எல்லாம் செஞ்சு காமிப்பான். ம்ம்ம்ம். அக்கா பண்ற பஜ்ஜி செம டேஸ்ட்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

3 வருடத்திற்க்குப் பின், 

     பலிங்கிபுரம் சிட்டி, நம்ம சின்னக்கா (பயங்கர tech savvyஆன ஆளு) வீட்டில.

     ஒரே பையன்.

  நான் வந்தோன்னையும் முதல்ல ஃபோட்டோ ஆல்பம்லாம் வரும். அதையெல்லாம் பாத்து முடிச்சா...

  "டேய், பிக் ஜீனியஸ், இங்க வா". அவன் ஒரமா ஃபைவ் ஸ்டார் தின்னுக்கிட்டிருப்பான்.

      "என்னம்மா?" அப்படியே ஆசையா கேப்பான்.

      "மாமா வந்திருக்கான் பாரு. ரைம்ஸ் பாடிக்காமி"

    ரெண்டு ரைம்ஸ் பாடுவான். செம காமெடியா மழலையா இருக்கும். சொல்லி முடிச்சிட்டு பொறுமையா நடந்து போய் முறுக்கு சாப்பிட ஆரம்பிப்பான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து பெரியக்காக்கு பொண்ணு பொறந்திச்சி.

    "அம்முக்குட்டி, மாமா வந்திருக்கான் பாரு. டேய் புத்தா, மாமா வந்திருக்கான். வெளிய வாடா. எப்ப பாரு ரூமுக்குள்ளேயே கெடக்கான்"

     அவன் வெளியே வந்து, "ஹாய் மாம்ஸ்"னு சொல்லிட்டு திரும்ப உள்ள போய் கதவ சாத்திடுவான்.

     அக்கா, "அவன் கெடக்கான். அம்முக்குட்டி (அதான் பேரே, அவ்ளோ செல்லம்) நீ வா"

            "சிக்கிலிபுக்கிலி"ன்னு சிரிச்சுக்கிட்டே வருவா.

            "மாமாக்கு டான்ஸ் பண்ணிக்காமி"

            "ம்ம் முடியாது போ"

           "கண்ணுக்குட்டில.. அம்மா உனக்கு புது பென்சில் பாக்ஸ் வாங்கித்தரேன்"

           "மாட்டேம் போ"

       "ஒழுங்கா பண்ணு. குச்சி எங்க? அடி வேனுமா?". நான் ஒதுங்கி ஒரமாக நின்று விடுவேன்.

            பாப்பா உடனே நடு ஹாலுக்கு வந்து சூப்பரா அபிநயம் பிடிப்பா.

           "என்ன பாட்டுமா?

           "நீயே பாடி, நீயே ஆடு"

         அடப்பாவமே...

       "தோம். ததிகினத்தோம்"ன்னு அவ ரூம் ஃபுல்லா சுத்தி சுத்தி ஆடுவா.

      நான், அக்கா, புத்தர் மூனு பேரும் கிச்சன்ல சுடச்சுட வாழைக்கா பஜ்ஜியும், சூப்பர் காஃஃபியும் குடிச்சுக்கிட்டு பேசிட்டிருப்போம்.

       நான், "அக்கா, இவன் கராத்தேல்லாம் முடிச்சுட்டானா?"

    "முடிச்சுட்டான்டா. ப்ளாக் பெல்ட். அங்க தொங்குது பாரு. பாட்டும் சூப்பரா பாடுறான். சீக்கிரம் அரங்கேற்றம் பண்ணிட வேண்டியது தான்"

     வெளியே ஜங் ஜங்னு குதிக்கிற சத்தம் கேக்கும். கால் மணி நேரம் கழிச்சு பாப்பாவும் பஜ்ஜி சாப்பிட வந்துடும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

4 வருக்ஷம் முன்னால

     பலிங்கிபுரத்துல, நம்ம சின்னக்கா(அதான் tech savvy) க்கு 2வது பையன்.

    முன்னாடில்லாம் ஃபோட்டோ ஆல்பம் வரும். இப்போ டிவில ஃபோட்டோவா ஒடுது.

     "சின்னக்கா. இதை போன தடவ வரும் போதே பாத்தாச்சு."

     "இரு அடுத்த ஃபோட்டோ சிடி போடுறேன்

     "பெரியவன் எங்கே?"

    "மாமாஆஆஆ....."ன்னு பிக் ஜீனியஸ் ஒடி வந்து கட்டி புடுச்சுப்பான். ரெண்டு பேரும் மிச்சர் சாப்பிட ஆரம்பிப்போம்.

       "குட்டி ஜீனியஸ் (சின்னவன்) எங்கே?"

        "தூங்கிட்டிருக்கான். இப்போ ஒன்றை வயசு ஆகுது"

         திடீரென dts எஃபெக்டில் ஒரு சத்தம்..

        "உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......"

        "பய எழுந்துட்டான்" 

         அக்கா அவனிடம், "குட்டி, மாமா வந்துருக்கான் பாரு"

         "உய்ய்ய்ய்ய்ய்"

           அக்கா, "சரி, இந்தா ஃபாரின் சாக்லேட். ஃபேன் எங்கே காட்டு"

       அவன் சாக்லேட்டை பிரித்த படி, இன்ட்ரெஸ்ட் இல்லாமல் மேலே கைக் காட்டினான்.

     அக்கா என்னிடம், "அல். இங்க பாரு ஃப்ளாக்ஷ் கார்ட்ஸ் (flash cards). தேடியலஞ்சு செகண்ட் ஹான்ட்ல வாங்கினேன். பலிங்கிபுரம் சிட்டில யாருக்கிட்டயும் இது கிடையாது"

            நான், "ஓ. இதான் ஃப்ளாக்ஷ் கார்ட்ஸா??"

        "ஆமாம். 10 மாசத்திலேயே இவனுக்கு இதை காம்பிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப பாரேன்"

           "குஜி (குட்டி ஜீனியஸ்). இதுல உராங்குட்டான் எது சொல்லு?"

        அவன் முதலில் என்னைப் பாத்தான், அப்புறம் பெரியவனைப் பாத்தான், அப்புறம் அவன் அம்மாவை. எனக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. ஒரு கார்டை தொட்டான்.

            "பார்றா!!!", நான்.

              அக்கா, "பெலிக்கன் பறவை எது?"

              ஒரு கரண்டி வாத்து பறவை இருக்கிற கார்டைக் காட்டினான்.

              நான் "இதான் பெலிக்கனா? சரி சரி" ன்னேன்.

           "அல். இவன் 100 நாட்டு தேசிய கொடிய கரெக்டா சொல்லுவான் பாரு. குஜீம்மா, அஸெர்பெய்ஜான் நாட்டுக்கொடி எங்க இருக்கு?"

               ஏதோ ஒரு flagகைக் காட்டினான்.

          பிக் ஜீனியஸ், "கரெக்ட்டா சொல்லிட்டான்மா" ன்னான். பெரியவனை நான் முறைச்சேன்.

     (அஸெர்பெய்ஜானா? நமக்கு வலம்புரி ஜானைத்தான் தெரியும். என்ன குடும்பம்டா இது!! ஆங். நாம மட்டும் பொது அறிவில கொறஞ்சவனா என்ன?)

               நான், "ஆப்பிரிக்கா கொடிய காட்டு"ன்னேன்.

              எல்லாரும் என்னையே மொறச்சாங்க.

         அக்கா என்னிடம், "ஆப்பிரிக்கால எந்த நாட்டைக்கேக்குற? அங்கயே 60 நாடுங்க இருக்கு"

              (அப்போ ஆப்பிரிக்கானா நாடு இல்லையா. சரி, பேச்ச மாத்துவோம்)

             "வேற என்னலாம் தெரியும்?"ன்னேன்.

      அக்கா நமட்டுச்சிரிப்புடன் "குஜீக்கண்ணு, மாமாக்கு விரல் வித்தைக்காட்டு".

     (ஹஹ, இதான் நமக்கு தெரியுமே. விரல் வித்தை தம்பியே நம்ம ஊரு தான)

   "டொய்ங்ங்ங்" என்றபடி, இரண்டு விரலால் என் கண்ணு ரெண்டையும் குத்தினான்.

       "அய்யோ அம்மா" என ஒட்டம் பிடிச்சேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
2 வருடம் கழித்து அதே வீட்டில்

           பெரியவன் ஒடி வந்து கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்தான். "செல்ல மாமா. ஐ மிஸ் யூ"

           பாசக்காரப் பய. நம்மளையே கலங்க வைக்கறானே

         சின்னக்காவிடம் கொஞ்சம் பம்மலாய், "சின்னவன் எங்கே?"

        "உள்ள இருக்கான். கூப்டவா?"

         நான் ரெண்டு ஸ்டெப் பின்வாங்கி, "வேணாம், வேணாம்"ன்னேன்.

         அக்கா, "வா நாம அங்க போவாம்" (விடமாட்ராங்களே)

      அவன் எதோடையோ விளையாடிட்ரருந்தான். கம்பி கம்பியா, அதுல கலர் கலரா பால் வேற. அங்கயும் இங்கயும் பாலைத் தள்ளி தள்ளி வெளயாடணும்.

          அக்கா, "குஜீ. 3787ம் 434ம் எவ்வளவு?"

        அவன் அந்த பாலையெல்லாம் அங்கயும் இங்கயும் நவுத்தினான். "16,43,558" ன்னான்.

        தூக்கி வாரிப் போட்டுது. செல்ஃபோன்ல செக் பண்ணிப் பாத்தா, கரெக்ட்.

         அக்கா "அல், இதான் அபாகஸ்"ன்னா. 
        
    "அக்கா, என்க்கு சிட்டில கொஞ்சம் வேலயிருக்கு. சாயங்காலம் வரேன்"ன்னு சொல்லி அபிட்டு ஆனேன்.

அன்று இரவு

      "சின்னவன் தூங்கிட்டானா?"

   அக்கா, "இல்ல. அந்த ரூம்ல கம்ப்யூட்டர்ல பேபி ரைம்ஸ் பாத்துட்டிருக்கான்"

       "அதுக்குள்ளயே கம்ப்யூட்டர்லாம் ஆபரேட் பண்ணுவானா?"

        "இல்ல, நான் போட்டு விடுவேன். அவன் பாப்பான்." 

        "ரைம்ஸ் பாட்டெல்லாம் எங்க கிடைச்சுது?"ன்னேன்.

        "முன்னாடி ஒருத்தர் ஃபாரின்லேந்து வாங்குவார். நாங்க சிடி காப்பி போட்டுப்போம், இப்போ யு ட்யூப் டவுண்லோடு தான்" 

         "நீங்க பெரியாளுங்கந் தாம்ப்பா"

         "டேய் குட்டி ஜீனியஸ், மாமா வந்துருக்கான். இங்க வாடா"

          அவன்,  "வரமாட்டேன்".

           "அம்மா உன்ன 'தண்டர் மா' தீம் பார்க்குக்கு கூட்டிட்டு போறேன், வாடா செல்லம். பீட்ஸாவும் வாங்கித்தரேன்"
          
           "பேட்டரி கார் வாங்கித் தரயா?"

            நான், "நான் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு" என்று குட்டி காரை எடுத்து காமிச்சேன்.

              அக்கா, "அல், அவன் கேக்குறது, அவன் ஒட்ற மாதிரி பெரிய கார். 12,000 ரூவா". அவனிடம் "சரி அழுது தொலைக்கிறேன். வா"

                அவன் என்னிடம் வந்து, "உன் செல் தா" ன்னான்.

      "இந்தா"ன்னு புதுசா வாங்கின ஆன்ட்ராயிடைக் கொடுத்தேன். படம் பாப்பானா இருக்கும்.

      திருப்பித் தந்தான். ஃபோன் லாங்குவேஜை மாத்திட்டான். அய்யோ. செட்டிங்ஸ்க்கு சைனீஸ்ல என்ன? எங்க இருக்கு?

               அவன், என்னைப்பாத்து, "ஹிஹிஹி"

                "டேய் தம்பி, மாத்திக்குடுடா"

                 "குஜீ, என்ன வெளயாட்டு. மாத்திக்கொடு" என்று அக்கா மிரட்டினாள். 

       "மாட்டேன். பாம் பண்றதுக்கு, எல்லா அயிட்டத்தையும் வாங்கிக் கொடுத்தா தான் மாத்துவேன்"

              அப்புறம் சைனா மொபைல் விக்கிறவனிடம் போனேன். "ஹலோ நாங்க சைனா மொபைல் விக்கிறோம் தான். அதுக்காக சைனீஸ் எல்லாம் தெரியாது"

                  கம்பெனிக்காரனிடம் கொடுத்து செட்டிங்ஸ் மாத்தினேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ, நம்ம வீடு

      நம்ம 3 வயசு சுட்டிக்கு, வீட்டுக்காரங்க யு ட்யூப்ல "பூனையாரே பூனையாரே" பாட்டு போட்டு ஊட்டி விட்டுட்டு இருந்தாங்க. நடுவில ஒரு பழய மொபைலையும் சப்பிக்கிட்டிருந்தான்.

      இரண்டு அக்காவும் வந்திருந்தாங்க.

      பெரியக்கா, "குட்டிப்பையா, புஜ்ஜிக்கண்ணு, உனக்கு என்னலாம் தெரியும்" ன்னாங்க.

         நான், "லட்டு (அதான் பேரே), அத்தைக்கு ஃபேன் எங்க இருக்கு காமி"

         சந்தோக்ஷமா மேல கைய காமிச்சான்.

         அக்கா, "3 வயசுல தான் ஃபேனைக் காட்டுறானா??? லட்டும்மா, வேற என்ன தெரியும், சொல்லு"

          அவன், "ஏஏஏ டுங்காக்கோ"ன்னு சூப்பரா ஒரு குட்டிக்கரணம் அடிச்சான்.