இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Saturday, July 17, 2021

'நானும் ஆன்ரப்ரனர் ஆவேன்' எனும் சபதம்

 12th படித்து முடித்த பின் எனக்கு ஒரு ஒன்றரை வருட பிரேக் தேவைப்பட்டது. பதினான்கு வருடம் ஸ்கூல் பிடிக்காமல் படித்தோம், ஒரு வருஷம் சும்மா ஜாலியா இருப்போமே எனும் அதீத புத்திசாலித்தனத்தின் விளைவு (அல்லது MBBS சீட்டுக்கு துட்டு கொடுத்து MCI permission கிடைக்காமலும் இருந்திருக்கலாம். கேட்பவர் புத்திசாலித்தனத்தை கொண்டு நான் யார் என முடிவு செய்யவும். எச்சரிக்கை: எழுதுபவர் புத்திசாலி எனக் கொள்க. ஹிஹி).


1999ம் ஆண்டு. ஈமெயில் என்பது பிரவுசிங் சென்டரில் மட்டுமே. மாதம் ஒரு முறை போவேன். மணிக்கு 30ருபாய். எல்லா மெயிலையும் select all--> delete செய்வேன். நமக்கு எவன் முக்கிய மெயில் அனுப்ப போகிறான்? எல்லாம் மில்லியன் பணம் தாரேன் கோஷ்டி தான்... ஈமெயில் பார்த்த பின்னாடி கொஞ்சம் ஜல்சா படம் பார்ப்பது. லிட்டர் பெட்ரோல் 30rs காலத்தில் பத்து நிமிடம் நெட் வேலைகளை முடித்தால் (Rs. 10) தான் வீட்டிற்கு வர பெட்ரோல் மிஞ்சும் (அப்பவே TVS super champ எனும் இந்தியாவில் நாலு வண்டிகள் வாங்கியவர்களில் நானும் ஒருவன்-15 வயது).

கிராமத்தில் பிறந்தேன் என்று தான் பெயர். ஒரு நண்பனும் கிடையாது. வருடம் மே பீ ஒரு முறை ஆற்றுக் குளியல். விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. பக்கத்து வீட்டு மற்றும் எதிர் வீட்டு பையன்களும் என்னைப் போல் தான். கிராமத்தில் வசதியானவர் வீட்டுப் பிள்ளைகளின் தனிமை யாரும் அறியாதது.

பொழுது போக விளையாட்டு இல்லை. சிறுவர்மலரே கதி. மாதம் ஒரு முறை வரும் காமிக்ஸ். என் ஸ்டாம்ப் கலெக்ஷனை பார்ப்பது என்பது தான் பொழுது போக்கு. டிவி பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் எனும் அளவிற்கு தூர்தர்ஷன் அடாவடி. மோடியாவது தமிழில் வணக்கம் சொல்வார். ராஜீவ் மற்றும் நரசிம்மராவ்கள் ஹிந்தியை டிவியில் திணித்து, அந்த மொழியின் மேல் நமக்கு வெறுப்பு வளர்த்தனர். வாரம் ஒருமுறை தமிழில் வரும் மகாபாரதம், சந்திரகாந்தா, ஜங்கிள் புக்கை வைத்த கண் விரியாமல் பார்ப்பேன். சில வருடம் கழித்து ஹிந்தியில் மட்டுமே வந்தது. அப்போது எவனையாவது விடாமல் கடித்து, அவன் வலி தாங்காமல், ரத்தம் சொட்டி செத்தான் என்றால் நமக்கு நிம்மதி வருமா என்றிருந்த காலம்.

எதை செய்தாலும் சிறப்பாக செய்வோம். சிறுவர்மலர் படித்தாலும், அதை எழுதினவனை விட ஆயிரம் முறை படித்து ஐந்தாண்டுகள் ஆன பின்பும் அதை அப்படியே ஒப்புவிக்கும் அளவிற்கு படிப்பேன். எடுத்த காரியத்தை வேறு எவராலும் செய்யமுடியாத அளவிற்கு செய்வதில் நான் கெட்டி.

பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் எத்தனை மாதம் எனத்தெரியாத பிரேக்கிற்குள் புகுந்தேன். ஒரு மாதம் வீட்டில் கேபிள் டிவி பார்த்து சலித்து விட்டது. மாயூரத்தில் லைப்ரரி இருந்தது என எவனோ சொல்லவே, போனேன். வெறி கொண்டு படிக்க ஆரம்பித்த்தில், சில மாதங்களில், பாவம் லைப்ரரியனே, "தம்பி, காமராஜர் காலத்துல வாங்கிப்போட்ட புத்தகத்த நீ தான் தூசு தட்டி எடுத்துப் படிக்கிற, பாரு நான் இன்னும் அதை என்ட்ரி கூட போடல. இப்ப கிளம்புப்பா, நாளைக்கு வரலாம். ஆறு மணியானா லைட் ஃஆப் பண்ணுவேன் எனத் தெரிஞ்சுகிட்டு டார்ச் வெச்சு படிச்சா எப்படி?" என கதறுவார் (MBBS படிக்கும் போது காரைக்கால் லைப்ரரியிலும் இதே நடந்தது).

என்ன காரணத்தினாலோ, தேசத்தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் படித்தேன். எப்போதும் விறைப்பாக இருப்பேன். காசு கொடுத்து பல புக்குகள் வாங்கினேன் (இப்போதும் கோவை எம்.எல்.ஏ தான் வானதி பதிப்பகத்தின் ஓனர் என நம்பினேன், ஏனென்றால் அவர்கள் புத்தகங்களை அவ்வளவு வாங்கியுள்ளேன்). காந்திஜியின் வரலாறு கண்டு, அடுத்த ஒன்றரை வருடம் பொய் பேசவில்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அப்புறம் பலரை படித்த பின்பு விவேகானந்தர் புக் இருக்க அதைப் படித்தேன். அப்படியே போய், அக்காலத்தில் உள்ள பல ஆன்மீக புத்தகங்கள் படித்து, ஓஷோவில் ஐக்கியமானேன். ஆன்மீக புக்குகளை எடுத்தால் தூக்கம் வந்துவிடும். விவேகானந்தர் புக்குகள் பத்து இருபது பக்கங்களில் முடிந்து விடும். ஓஷோ பயங்கர இன்டரஸ்டிங் ஆக இருக்கும், அப்போது அவரின் வெளிவந்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன். என்னைப்போல் ஆழ்நிலை தியானம் செய்ய அப்போது இன்னொருவன் பிறக்கவில்லை. அப்படியே கண்ணை மூடினால், பிரபஞ்சம் சென்று விடுவேன், மனதில் சூன்யம் மட்டுமே வரவழைக்கும் கலை எனக்கு எளிதில் வந்தது. வயது 17. அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க ஆரம்பித்த பின்பு, பாக்கி அனைவரும் கசந்தனர். கண்ணதாசன் அப்படி எழுதியிருப்பார். காசு கொடுத்து கிடைக்கவே கிடைக்காத கடைசி பாகங்களையும் படித்தேன். இன்றுவரை என் பேவரைட் ஆன்மிக புக் அதுவே. பின்னர் பிரபுபாதாவின் (இஸ்கான் ஆள்) பகவத் கீதை படித்தேன். அதன் subheading: 'கீதை, உள்ளது உள்ளபடி'. எதையும் நம்பும் வயது. இம்மாம் பெரிய ஆள், சொத்து சுகமெல்லாம் இருந்தும் அவருக்காக துறவறம் புகும் அழகான பணக்கார இளைஞர்கள் இருக்கிறார்களே என அவரின் புக்கை படித்தேன். என்னளவிற்கு நோட்ஸ் எடுத்து எவனும் புக்கை படித்திருப்பானா தெரியாது. யாரும் சொல்லாமலே அதை செய்தேன். அக்கா வீட்டுக்காரர் பயந்து போகும் அளவிற்கு அவர் வீட்டில் இருந்து படித்தேன்.

பகவத்கீதை நூறு பக்கங்களில் முடிந்து விடும். இதுவோ 1800பக்கங்கள். "உள்ளது உள்ளபடி"னு சொல்லிருக்கார். படிப்போம்னு படிச்சு, ஆயிரம் பக்கங்களில் தூக்கிப் போட்டேன். முடியல. புரியாமல் பேசுவது கெத்து என்ற என் எண்ணம் மாறியது.

இதன் தாக்கமாக கர்னாடிக் ம்யூசிக் கேட்க ஆரம்பித்தேன். கேசட் கடைக்காரனே ஒரு வருடம் கழித்து, "பாட்டு கிளாஸ் வச்சுருக்கீங்களா, இவ்வளவு கர்னாடிக் கேசட் வாங்குறீங்களே?" என வியந்தான். யோசித்து அதையும் விட்டேன்.

கோயில்கள் பற்றிய புத்தகங்களை எடுத்தேன். என் வயதில் எவனுமே செய்யாத மாதிரி 48 திவ்யதேசங்கள் கோயில்களை பஸ்ஸில் சுற்றினேன், (இவன் சாமியாராடுவான் போலருக்கு என என் அத்தான் புலம்பும் அளவிற்கு செய்தேன்).

கொஞ்சம் கொஞ்சமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் (வேறு ஒன்றும் படிக்க உருப்படியாக மாயூரத்தில் இல்லை). இருந்த ஒன்றிரண்டு புத்தகங்களையும் படிக்கவே, அதற்கு பின் ஆர்டர் செய்து ஒரு நூற்றியைம்பது புத்தகங்கள் படித்திருப்பேன். எம்.எஸ். உதயமூர்த்தி, இறையன்பு, அப்துல் கலாம், ஷிவ் கேரா என் ஆத்ம நண்பர்கள் ஆனார்கள். ஊருக்கு உபதேசம் செய்து கடைசியில் தற்கொலை செய்து கொண்ட டேல் கார்னகி தான் என் கடைசி ஆள். அவரின் கருத்துகள், ஐந்து வருடங்கள் எண்னை விடாமல் துரத்தியன எனலாம். வீடெல்லாம் அவர் வசனத்தை எழுதி வைத்திருப்பேன்.

கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க எதுவிலாமல், லைப்ரைக்காரே பாம்பு இருக்கும் என நினைத்து போகாமல் இருக்கும், லைப்ரரியில் உள்ள இருட்டு ஏரியாவிற்கு போய், ராதுகா பதிப்பகத்தை அறிந்தேன், ரஷ்ய மொழியில் வந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூறு புத்தகங்களாவது படித்திருப்பேன். இன்றும் மனதிற்கு பிடித்த nostalgiaவை தூண்டும் புத்தகங்கள் அவை. கம்யூனிஸ்ட் ஆக மாறி பலரிடம் உளற ஆரம்பித்தேன். "புரச்ச்சி" வரும் என பலமாக பும்பினேன். சில வருடங்கள் அப்படியே இருந்தேன் என ஞாபகம்.

திராவிடர் புக் படிக்காமலேயே, மற்ற நிறைய வாசிப்புகளால் பின்னர் நாத்திகனாக பல வருடங்கள் இருந்தேன். பெரியார் புக் ஒரு முறை எடுத்தேன். என்னைப் போன்ற புத்தக புழுக்களினாலேயே அதை இரண்டு பக்கம் படித்தால் தூங்க முடிகிறது என்பதால், ஓடி வந்து விட்டேன். ஹிட்லரின் மெயின் காம்ப்பும் அப்படியே. தாஸ்தாவெஸ்கி, ஷேக்ஸ்பியர் படித்தால் சும்மா சுழற்றி அடிக்கும். புத்தகம் படிப்பவர்க்கு Insomnia வராது என்பதற்கு நானே உதாரணம்.

கடைசியாக நாவல்களில் விழுந்தேன். சிறு பத்திரிகை படிக்க ஆரம்பித்தேன். காசச்சுவடு ஒரு காலத்தில் இலக்கிய பத்திரிக்கையாக இருந்தது. உயிர்மை மற்றும் தீராநதி பின்னர் வந்தது. எல்லாம் சீரியஸ் இலக்கிய வாசகனுக்கு மட்டுமே. அதில் வரும் பரிந்துரைகளை எல்லாம் படிப்பேன். சாரு ஒரு முறை எழுதிய சார்லஸ் புக்கோவ்ஸ்கி தான் இன்று வரை என பேவரைட் ஆதர். லிட்டர் பெட்ரோல், முப்பது ரூபாய்க்கு கிடைத்த காலத்தில், அவரின் ஒரு புக்கை ஐந்தூறு ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கும் அளவிற்கு அவரைப் பிடிக்கும். இன்று வரை ஐயாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் படித்திருந்தாலும், புக்கோவ்ஸ்கி போல ஒரு ஆதரை பார்க்க முடியாது என்பேன். அவர் புத்தகங்களை படித்து முடித்த பின், ஏனோ இதற்கு மேல் ஒன்றுமில்லை என நாவல்களையே விட்டு விட்டேன் எனலாம்.

சரி மேட்டருக்கு வருவோம். வீட்டில் இருந்த ஒன்றரை வருடத்தில், சுயமுன்னேற்ற புத்தகம் படித்து, "வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?" (இந்த மாதிரி துப்புக்கெட்ட அர்த்தமில்லாத வசனமேல்லாம் சுயமுன்னேற்ற புத்தகங்கங்களில் மட்டுமே வரும்), என அறிந்தேன். MBBS ஆரம்பிக்கும் வரை சும்மா எப்படி இருப்பது? எவ்வளவு தான் படிப்பது, ம்யூசிக் கேட்பது?? சம்பாதிக்க என்ன வழி என தேடினேன். பத்து நாளில் பணக்காரர் ஆக அன்றைய தினமலர் ஞாயிறு இதழை வாங்க வேண்டும். அதில் பல குட்டிக்குட்டி விளம்பரங்கள் வரும். அதைப்பார்த்து ஒரு தொழில்முனைவோர் ஆவது என முடிவு செய்தேன்.

1. நம் டெல்டா பகுதியில், நமக்கு இடம் இருக்கு, வைக்கோல் இருக்கு, பாழடைஞ்ச பழைய பெரிய வீடு ஒன்னு இருக்கு. காளான் பண்ணை ஆரம்பித்தால் கோடீஸ்வரர் ஆகி விடலாம். ஆனால் நாத்தம் புடுங்குமே.
2. பன்றிகள் பண்ணை. ஒரு பன்னி முப்பது குட்டி போடும். பணக்காரர் ஆவது சத்தியம். என் அம்மா சொன்னார், "ஐயரு வூட்ல போய் ஒரு கிலோ பன்னி கறி வாங்கியா" என ஊர் சொன்னால் என்ன செய்வாய் என்றார். ச்சே. இது வேலைக்காவது.
3. சவுக்கு தோட்டம், தென்னைப் பண்ணை, வாழைப்பண்ணை என இப்போது பசுமை விகடனில் வரும் எல்லாவற்றையும் அப்போதே யோசித்து பார்த்தாயிற்று. பணப்பயிர் கரும்பை வெட்டவே ஆள் இல்லையாம், இதெல்லாம் செஞ்சு கிழிச்ச மாதிரி தான் என அனுபவப்பட்ட ஆட்கள் சொன்ன போது ஒத்துக் கொண்டேன்.

விவசாயம் பண்ணி கிழிக்க முடியாது என்பதை 17 வருடத்ததிலேயே உணர்ந்த நான், மீண்டும் சண்டே தினமலர் பக்கம் திரும்பினேன்.

நாங்கள் மெழுகு தருவோம், மெழுகுவர்த்தி செய்து தாருங்கள், நாங்களே வாங்கிக்கொள்வோம் என வந்த விளம்பரம் பார்த்தேன். பல மாதங்களாக என்டர்ப்ரனர் ஆக வேண்டும் என சும்மா பஜ்ஜி சாப்பிட்டு வீட்டில் உட்கார்ந்து மூளையை கசக்கிய என்னை, சில மாதங்கள் அந்த விளம்பரம் அலைக்கழித்தது. அதே போல பல விளம்பரங்கள் பற்றி ராப்பூரா கனா கண்டு பணக்காரர் அகிவிட்டமாதிரி வந்தாலும், 'இதை செய்து பார்த்து விடுவது என, ஏழு மணி நேரம் பஸ்சிஸ், திருசெங்கோடு எனும் கேள்விபடாத ஊருக்கு போனேன். மெழுகுவர்த்தி என்பது அப்போது மிகவும் பயன்படுத்தப்பட்ட பொருள். டிரெயினிங்கிற்கு ஐம்பதோ நூறோ பணம் கட்டியுள்ளோம், நிறைய பெரிய ஆட்கள், தொழிலதிபர்கள் வருவார்கள், சின்னப்பையன் நமக்கு வெட்கமாக இருக்கும், ஆனால் நம் ஊரில், பெரிய பேக்டரி ஆரம்பித்து பெரியாளாகி விட வேண்டும் என்ற எண்ணம், என் வெட்கத்தை மறைத்தது. ஏழு மணி நேரம் பஸ்சிஸ் கனவுகளுடன் பயணித்தேன். அதை தயாரிக்கும் பேக்டரி எங்கு உள்ளது என விசாரித்துக் கொண்டே நடந்தேன். பார்த்தால் ஒரு கேவலமான இருட்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்க்குள், ஒரு பத்துக்கு பத்து அறையில் இருந்தது. எஸ்டிடி பூத் பெண் போல ஒரு பெண், இப்படி செய் என்று, ஒரு சிறிய அச்சில், நூல் ஊற்றி மெழுகு ஊற்ற கற்றுத்தந்தார். இப்படி உட்கார்ந்து ஊற்றினால் நாம தொழிலதிபர் ஆக முடியாது, லேபர் தான் ஆக முடியும் என, இதுவரை உடலுழைப்பே என்னவென்று அறியாத என் மூளை சிந்தித்தது. கரெக்ட் தான் அது. அவன்களே முன்னேறாமல், வீணாய்போன இந்த டிரேயினிங்கை காசுக்காக செய்கிறார்கள், பாவம் எனப்பட்டது. சர்டிபிக்கேட் எல்லாம் தந்தார்கள். நான் கிளம்பும் நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து ஒரு முப்பது வயது ஆள் வந்தான். சர்தான், 'எல்லா வயசிலும் நம்மைப் போல இருப்பாங்க' என ஞானம் வந்து கிளம்பினேன்.

வீட்டிற்கு திரும்பி வந்த ஏழு மணி நேரத்தில், இனிமேல் என்டர்ப்ரனர் ஆக வேண்டும் என்ற வெறி மடிந்து, அவநம்பிக்கை மட்டுமே இருந்தது.

புது மனிதன் ஆனேன். ஆனால் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

கம்ப்பூட்டர் கிளாஸ், பியானோ வாசிப்பு, புல்லாங்குழல் வாசித்து மயக்கமடைவது எப்படி, ஒரே நாளில் ஜிம்மிற்கு போய் ஓடியாருவது எப்படி, ஜாகிங் என்றால் என்ன, டைப் ரைட்டிங், கடலை செய்தேன். அதைப் பின்னர் பார்ப்போம்.

பின்னர் MBBS வகுப்புகள் ஆரம்பித்தது. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து, அந்த ஒரு வேலையை மட்டும் இன்றும் செய்கிறேன்.

No comments:

Post a Comment