இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Saturday, July 17, 2021

'நானும் ஆன்ரப்ரனர் ஆவேன்' எனும் சபதம்

 12th படித்து முடித்த பின் எனக்கு ஒரு ஒன்றரை வருட பிரேக் தேவைப்பட்டது. பதினான்கு வருடம் ஸ்கூல் பிடிக்காமல் படித்தோம், ஒரு வருஷம் சும்மா ஜாலியா இருப்போமே எனும் அதீத புத்திசாலித்தனத்தின் விளைவு (அல்லது MBBS சீட்டுக்கு துட்டு கொடுத்து MCI permission கிடைக்காமலும் இருந்திருக்கலாம். கேட்பவர் புத்திசாலித்தனத்தை கொண்டு நான் யார் என முடிவு செய்யவும். எச்சரிக்கை: எழுதுபவர் புத்திசாலி எனக் கொள்க. ஹிஹி).


1999ம் ஆண்டு. ஈமெயில் என்பது பிரவுசிங் சென்டரில் மட்டுமே. மாதம் ஒரு முறை போவேன். மணிக்கு 30ருபாய். எல்லா மெயிலையும் select all--> delete செய்வேன். நமக்கு எவன் முக்கிய மெயில் அனுப்ப போகிறான்? எல்லாம் மில்லியன் பணம் தாரேன் கோஷ்டி தான்... ஈமெயில் பார்த்த பின்னாடி கொஞ்சம் ஜல்சா படம் பார்ப்பது. லிட்டர் பெட்ரோல் 30rs காலத்தில் பத்து நிமிடம் நெட் வேலைகளை முடித்தால் (Rs. 10) தான் வீட்டிற்கு வர பெட்ரோல் மிஞ்சும் (அப்பவே TVS super champ எனும் இந்தியாவில் நாலு வண்டிகள் வாங்கியவர்களில் நானும் ஒருவன்-15 வயது).

கிராமத்தில் பிறந்தேன் என்று தான் பெயர். ஒரு நண்பனும் கிடையாது. வருடம் மே பீ ஒரு முறை ஆற்றுக் குளியல். விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. பக்கத்து வீட்டு மற்றும் எதிர் வீட்டு பையன்களும் என்னைப் போல் தான். கிராமத்தில் வசதியானவர் வீட்டுப் பிள்ளைகளின் தனிமை யாரும் அறியாதது.

பொழுது போக விளையாட்டு இல்லை. சிறுவர்மலரே கதி. மாதம் ஒரு முறை வரும் காமிக்ஸ். என் ஸ்டாம்ப் கலெக்ஷனை பார்ப்பது என்பது தான் பொழுது போக்கு. டிவி பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் எனும் அளவிற்கு தூர்தர்ஷன் அடாவடி. மோடியாவது தமிழில் வணக்கம் சொல்வார். ராஜீவ் மற்றும் நரசிம்மராவ்கள் ஹிந்தியை டிவியில் திணித்து, அந்த மொழியின் மேல் நமக்கு வெறுப்பு வளர்த்தனர். வாரம் ஒருமுறை தமிழில் வரும் மகாபாரதம், சந்திரகாந்தா, ஜங்கிள் புக்கை வைத்த கண் விரியாமல் பார்ப்பேன். சில வருடம் கழித்து ஹிந்தியில் மட்டுமே வந்தது. அப்போது எவனையாவது விடாமல் கடித்து, அவன் வலி தாங்காமல், ரத்தம் சொட்டி செத்தான் என்றால் நமக்கு நிம்மதி வருமா என்றிருந்த காலம்.

எதை செய்தாலும் சிறப்பாக செய்வோம். சிறுவர்மலர் படித்தாலும், அதை எழுதினவனை விட ஆயிரம் முறை படித்து ஐந்தாண்டுகள் ஆன பின்பும் அதை அப்படியே ஒப்புவிக்கும் அளவிற்கு படிப்பேன். எடுத்த காரியத்தை வேறு எவராலும் செய்யமுடியாத அளவிற்கு செய்வதில் நான் கெட்டி.

பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் எத்தனை மாதம் எனத்தெரியாத பிரேக்கிற்குள் புகுந்தேன். ஒரு மாதம் வீட்டில் கேபிள் டிவி பார்த்து சலித்து விட்டது. மாயூரத்தில் லைப்ரரி இருந்தது என எவனோ சொல்லவே, போனேன். வெறி கொண்டு படிக்க ஆரம்பித்த்தில், சில மாதங்களில், பாவம் லைப்ரரியனே, "தம்பி, காமராஜர் காலத்துல வாங்கிப்போட்ட புத்தகத்த நீ தான் தூசு தட்டி எடுத்துப் படிக்கிற, பாரு நான் இன்னும் அதை என்ட்ரி கூட போடல. இப்ப கிளம்புப்பா, நாளைக்கு வரலாம். ஆறு மணியானா லைட் ஃஆப் பண்ணுவேன் எனத் தெரிஞ்சுகிட்டு டார்ச் வெச்சு படிச்சா எப்படி?" என கதறுவார் (MBBS படிக்கும் போது காரைக்கால் லைப்ரரியிலும் இதே நடந்தது).

என்ன காரணத்தினாலோ, தேசத்தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் படித்தேன். எப்போதும் விறைப்பாக இருப்பேன். காசு கொடுத்து பல புக்குகள் வாங்கினேன் (இப்போதும் கோவை எம்.எல்.ஏ தான் வானதி பதிப்பகத்தின் ஓனர் என நம்பினேன், ஏனென்றால் அவர்கள் புத்தகங்களை அவ்வளவு வாங்கியுள்ளேன்). காந்திஜியின் வரலாறு கண்டு, அடுத்த ஒன்றரை வருடம் பொய் பேசவில்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அப்புறம் பலரை படித்த பின்பு விவேகானந்தர் புக் இருக்க அதைப் படித்தேன். அப்படியே போய், அக்காலத்தில் உள்ள பல ஆன்மீக புத்தகங்கள் படித்து, ஓஷோவில் ஐக்கியமானேன். ஆன்மீக புக்குகளை எடுத்தால் தூக்கம் வந்துவிடும். விவேகானந்தர் புக்குகள் பத்து இருபது பக்கங்களில் முடிந்து விடும். ஓஷோ பயங்கர இன்டரஸ்டிங் ஆக இருக்கும், அப்போது அவரின் வெளிவந்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன். என்னைப்போல் ஆழ்நிலை தியானம் செய்ய அப்போது இன்னொருவன் பிறக்கவில்லை. அப்படியே கண்ணை மூடினால், பிரபஞ்சம் சென்று விடுவேன், மனதில் சூன்யம் மட்டுமே வரவழைக்கும் கலை எனக்கு எளிதில் வந்தது. வயது 17. அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க ஆரம்பித்த பின்பு, பாக்கி அனைவரும் கசந்தனர். கண்ணதாசன் அப்படி எழுதியிருப்பார். காசு கொடுத்து கிடைக்கவே கிடைக்காத கடைசி பாகங்களையும் படித்தேன். இன்றுவரை என் பேவரைட் ஆன்மிக புக் அதுவே. பின்னர் பிரபுபாதாவின் (இஸ்கான் ஆள்) பகவத் கீதை படித்தேன். அதன் subheading: 'கீதை, உள்ளது உள்ளபடி'. எதையும் நம்பும் வயது. இம்மாம் பெரிய ஆள், சொத்து சுகமெல்லாம் இருந்தும் அவருக்காக துறவறம் புகும் அழகான பணக்கார இளைஞர்கள் இருக்கிறார்களே என அவரின் புக்கை படித்தேன். என்னளவிற்கு நோட்ஸ் எடுத்து எவனும் புக்கை படித்திருப்பானா தெரியாது. யாரும் சொல்லாமலே அதை செய்தேன். அக்கா வீட்டுக்காரர் பயந்து போகும் அளவிற்கு அவர் வீட்டில் இருந்து படித்தேன்.

பகவத்கீதை நூறு பக்கங்களில் முடிந்து விடும். இதுவோ 1800பக்கங்கள். "உள்ளது உள்ளபடி"னு சொல்லிருக்கார். படிப்போம்னு படிச்சு, ஆயிரம் பக்கங்களில் தூக்கிப் போட்டேன். முடியல. புரியாமல் பேசுவது கெத்து என்ற என் எண்ணம் மாறியது.

இதன் தாக்கமாக கர்னாடிக் ம்யூசிக் கேட்க ஆரம்பித்தேன். கேசட் கடைக்காரனே ஒரு வருடம் கழித்து, "பாட்டு கிளாஸ் வச்சுருக்கீங்களா, இவ்வளவு கர்னாடிக் கேசட் வாங்குறீங்களே?" என வியந்தான். யோசித்து அதையும் விட்டேன்.

கோயில்கள் பற்றிய புத்தகங்களை எடுத்தேன். என் வயதில் எவனுமே செய்யாத மாதிரி 48 திவ்யதேசங்கள் கோயில்களை பஸ்ஸில் சுற்றினேன், (இவன் சாமியாராடுவான் போலருக்கு என என் அத்தான் புலம்பும் அளவிற்கு செய்தேன்).

கொஞ்சம் கொஞ்சமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் (வேறு ஒன்றும் படிக்க உருப்படியாக மாயூரத்தில் இல்லை). இருந்த ஒன்றிரண்டு புத்தகங்களையும் படிக்கவே, அதற்கு பின் ஆர்டர் செய்து ஒரு நூற்றியைம்பது புத்தகங்கள் படித்திருப்பேன். எம்.எஸ். உதயமூர்த்தி, இறையன்பு, அப்துல் கலாம், ஷிவ் கேரா என் ஆத்ம நண்பர்கள் ஆனார்கள். ஊருக்கு உபதேசம் செய்து கடைசியில் தற்கொலை செய்து கொண்ட டேல் கார்னகி தான் என் கடைசி ஆள். அவரின் கருத்துகள், ஐந்து வருடங்கள் எண்னை விடாமல் துரத்தியன எனலாம். வீடெல்லாம் அவர் வசனத்தை எழுதி வைத்திருப்பேன்.

கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க எதுவிலாமல், லைப்ரைக்காரே பாம்பு இருக்கும் என நினைத்து போகாமல் இருக்கும், லைப்ரரியில் உள்ள இருட்டு ஏரியாவிற்கு போய், ராதுகா பதிப்பகத்தை அறிந்தேன், ரஷ்ய மொழியில் வந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூறு புத்தகங்களாவது படித்திருப்பேன். இன்றும் மனதிற்கு பிடித்த nostalgiaவை தூண்டும் புத்தகங்கள் அவை. கம்யூனிஸ்ட் ஆக மாறி பலரிடம் உளற ஆரம்பித்தேன். "புரச்ச்சி" வரும் என பலமாக பும்பினேன். சில வருடங்கள் அப்படியே இருந்தேன் என ஞாபகம்.

திராவிடர் புக் படிக்காமலேயே, மற்ற நிறைய வாசிப்புகளால் பின்னர் நாத்திகனாக பல வருடங்கள் இருந்தேன். பெரியார் புக் ஒரு முறை எடுத்தேன். என்னைப் போன்ற புத்தக புழுக்களினாலேயே அதை இரண்டு பக்கம் படித்தால் தூங்க முடிகிறது என்பதால், ஓடி வந்து விட்டேன். ஹிட்லரின் மெயின் காம்ப்பும் அப்படியே. தாஸ்தாவெஸ்கி, ஷேக்ஸ்பியர் படித்தால் சும்மா சுழற்றி அடிக்கும். புத்தகம் படிப்பவர்க்கு Insomnia வராது என்பதற்கு நானே உதாரணம்.

கடைசியாக நாவல்களில் விழுந்தேன். சிறு பத்திரிகை படிக்க ஆரம்பித்தேன். காசச்சுவடு ஒரு காலத்தில் இலக்கிய பத்திரிக்கையாக இருந்தது. உயிர்மை மற்றும் தீராநதி பின்னர் வந்தது. எல்லாம் சீரியஸ் இலக்கிய வாசகனுக்கு மட்டுமே. அதில் வரும் பரிந்துரைகளை எல்லாம் படிப்பேன். சாரு ஒரு முறை எழுதிய சார்லஸ் புக்கோவ்ஸ்கி தான் இன்று வரை என பேவரைட் ஆதர். லிட்டர் பெட்ரோல், முப்பது ரூபாய்க்கு கிடைத்த காலத்தில், அவரின் ஒரு புக்கை ஐந்தூறு ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கும் அளவிற்கு அவரைப் பிடிக்கும். இன்று வரை ஐயாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் படித்திருந்தாலும், புக்கோவ்ஸ்கி போல ஒரு ஆதரை பார்க்க முடியாது என்பேன். அவர் புத்தகங்களை படித்து முடித்த பின், ஏனோ இதற்கு மேல் ஒன்றுமில்லை என நாவல்களையே விட்டு விட்டேன் எனலாம்.

சரி மேட்டருக்கு வருவோம். வீட்டில் இருந்த ஒன்றரை வருடத்தில், சுயமுன்னேற்ற புத்தகம் படித்து, "வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?" (இந்த மாதிரி துப்புக்கெட்ட அர்த்தமில்லாத வசனமேல்லாம் சுயமுன்னேற்ற புத்தகங்கங்களில் மட்டுமே வரும்), என அறிந்தேன். MBBS ஆரம்பிக்கும் வரை சும்மா எப்படி இருப்பது? எவ்வளவு தான் படிப்பது, ம்யூசிக் கேட்பது?? சம்பாதிக்க என்ன வழி என தேடினேன். பத்து நாளில் பணக்காரர் ஆக அன்றைய தினமலர் ஞாயிறு இதழை வாங்க வேண்டும். அதில் பல குட்டிக்குட்டி விளம்பரங்கள் வரும். அதைப்பார்த்து ஒரு தொழில்முனைவோர் ஆவது என முடிவு செய்தேன்.

1. நம் டெல்டா பகுதியில், நமக்கு இடம் இருக்கு, வைக்கோல் இருக்கு, பாழடைஞ்ச பழைய பெரிய வீடு ஒன்னு இருக்கு. காளான் பண்ணை ஆரம்பித்தால் கோடீஸ்வரர் ஆகி விடலாம். ஆனால் நாத்தம் புடுங்குமே.
2. பன்றிகள் பண்ணை. ஒரு பன்னி முப்பது குட்டி போடும். பணக்காரர் ஆவது சத்தியம். என் அம்மா சொன்னார், "ஐயரு வூட்ல போய் ஒரு கிலோ பன்னி கறி வாங்கியா" என ஊர் சொன்னால் என்ன செய்வாய் என்றார். ச்சே. இது வேலைக்காவது.
3. சவுக்கு தோட்டம், தென்னைப் பண்ணை, வாழைப்பண்ணை என இப்போது பசுமை விகடனில் வரும் எல்லாவற்றையும் அப்போதே யோசித்து பார்த்தாயிற்று. பணப்பயிர் கரும்பை வெட்டவே ஆள் இல்லையாம், இதெல்லாம் செஞ்சு கிழிச்ச மாதிரி தான் என அனுபவப்பட்ட ஆட்கள் சொன்ன போது ஒத்துக் கொண்டேன்.

விவசாயம் பண்ணி கிழிக்க முடியாது என்பதை 17 வருடத்ததிலேயே உணர்ந்த நான், மீண்டும் சண்டே தினமலர் பக்கம் திரும்பினேன்.

நாங்கள் மெழுகு தருவோம், மெழுகுவர்த்தி செய்து தாருங்கள், நாங்களே வாங்கிக்கொள்வோம் என வந்த விளம்பரம் பார்த்தேன். பல மாதங்களாக என்டர்ப்ரனர் ஆக வேண்டும் என சும்மா பஜ்ஜி சாப்பிட்டு வீட்டில் உட்கார்ந்து மூளையை கசக்கிய என்னை, சில மாதங்கள் அந்த விளம்பரம் அலைக்கழித்தது. அதே போல பல விளம்பரங்கள் பற்றி ராப்பூரா கனா கண்டு பணக்காரர் அகிவிட்டமாதிரி வந்தாலும், 'இதை செய்து பார்த்து விடுவது என, ஏழு மணி நேரம் பஸ்சிஸ், திருசெங்கோடு எனும் கேள்விபடாத ஊருக்கு போனேன். மெழுகுவர்த்தி என்பது அப்போது மிகவும் பயன்படுத்தப்பட்ட பொருள். டிரெயினிங்கிற்கு ஐம்பதோ நூறோ பணம் கட்டியுள்ளோம், நிறைய பெரிய ஆட்கள், தொழிலதிபர்கள் வருவார்கள், சின்னப்பையன் நமக்கு வெட்கமாக இருக்கும், ஆனால் நம் ஊரில், பெரிய பேக்டரி ஆரம்பித்து பெரியாளாகி விட வேண்டும் என்ற எண்ணம், என் வெட்கத்தை மறைத்தது. ஏழு மணி நேரம் பஸ்சிஸ் கனவுகளுடன் பயணித்தேன். அதை தயாரிக்கும் பேக்டரி எங்கு உள்ளது என விசாரித்துக் கொண்டே நடந்தேன். பார்த்தால் ஒரு கேவலமான இருட்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்க்குள், ஒரு பத்துக்கு பத்து அறையில் இருந்தது. எஸ்டிடி பூத் பெண் போல ஒரு பெண், இப்படி செய் என்று, ஒரு சிறிய அச்சில், நூல் ஊற்றி மெழுகு ஊற்ற கற்றுத்தந்தார். இப்படி உட்கார்ந்து ஊற்றினால் நாம தொழிலதிபர் ஆக முடியாது, லேபர் தான் ஆக முடியும் என, இதுவரை உடலுழைப்பே என்னவென்று அறியாத என் மூளை சிந்தித்தது. கரெக்ட் தான் அது. அவன்களே முன்னேறாமல், வீணாய்போன இந்த டிரேயினிங்கை காசுக்காக செய்கிறார்கள், பாவம் எனப்பட்டது. சர்டிபிக்கேட் எல்லாம் தந்தார்கள். நான் கிளம்பும் நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து ஒரு முப்பது வயது ஆள் வந்தான். சர்தான், 'எல்லா வயசிலும் நம்மைப் போல இருப்பாங்க' என ஞானம் வந்து கிளம்பினேன்.

வீட்டிற்கு திரும்பி வந்த ஏழு மணி நேரத்தில், இனிமேல் என்டர்ப்ரனர் ஆக வேண்டும் என்ற வெறி மடிந்து, அவநம்பிக்கை மட்டுமே இருந்தது.

புது மனிதன் ஆனேன். ஆனால் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

கம்ப்பூட்டர் கிளாஸ், பியானோ வாசிப்பு, புல்லாங்குழல் வாசித்து மயக்கமடைவது எப்படி, ஒரே நாளில் ஜிம்மிற்கு போய் ஓடியாருவது எப்படி, ஜாகிங் என்றால் என்ன, டைப் ரைட்டிங், கடலை செய்தேன். அதைப் பின்னர் பார்ப்போம்.

பின்னர் MBBS வகுப்புகள் ஆரம்பித்தது. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து, அந்த ஒரு வேலையை மட்டும் இன்றும் செய்கிறேன்.

Thursday, July 25, 2013

பீட்டர் சைக்கிள் டைரி


சுபாக்ஷ், "டேய் அல்கேட்ஸ், நேத்திக்கு ஒரு படம் பாத்தேன்டா. நம்ம ஊருல நிறைய பேரு டீ க்ஷர்ட்ல தாடியோட ஒரு அண்ணன் ஃபோட்டோ இருக்குமே, அவர் பத்தின படம்டா".
"தாடியோட அண்ணனா? யாரு....."
"ஆமா மச்சி, புரட்சி ஓங்குகன்னு போட்ருப்பாங்க. சீமானோட அண்ணன்னு நெனைக்குறேன்".
"டேய், அவர் சே குவேரா டா. க்யூபா புரட்சிக்காக அவர் பண்ணின யுத்தம் தான் அவர ஃபேமஸ் ஆக்கிச்சு"
"ஆங் அவரே தான். படம் பேரு கூட பேட்டரி சைக்கிள்னு நெனைக்கிறேன்".
"அது மோட்டார் சைக்கிள் டைரிஸ்டா. உலக சினிமா. ஆமா உனக்கு கமல் படமே பக்கத்துல யாராவது சொல்லி புரிய வெச்சா தான் புரியும். நீ எப்படிடா உலக சினிமால்லாம் பாத்த?"
"ஹிஹி அது வந்து நம்ம சுகுமாரு கடையில ஒரு சிடியை ஆட்டைய போட்டேன். பாத்தா இந்தப் படம். அதான்"
"அதானே பாத்தேன். திருட்டு மாங்கான்னா ருசியே வேற இல்ல. ஓகே. சே குவேரா ஃபைனல் இயர் டாக்டருக்கு படிக்கிறப்ப, அவரும் ஒரு உயிர் வேதியியல் படிக்கிற ஃப்ரென்டுமா சேந்து, சவுத் அமெரிக்கா கண்டம் பூரா மோட்டார் சைக்கிள்ல சுத்தினாங்க. அந்த அணுபவத்துக்கு அப்புறம் தான் சே புரட்சியாளனா மாறுனாரு".
"மாப்ள நாம எப்படா அப்படில்லாம் ஆவுறது?"
"டேய் அவர சிஐஏ சுத்தி வளைச்சு கொன்னுடிச்சி. நீயும் சாவனுமா?"
"இல்ல மாப்ள. நீயும் ஃபைனல் இயர் MBBS படிக்கிற. நானும் MBA முடிச்சிட்டேன். நாம ஏன் இந்தியா பூரா பைக்ல சுத்தக்கூடாது? அதை நாம ஃபேமஸான பின்ன, படமா எடுப்பாங்க"
"உன்னோட சுத்தறதா? நெனைச்சாலே கொஞ்சம் கேரா வருதேடா"

-----------------------------------------------------------------------------------------------------------
நான், "அப்பா, நான் ஜாவா கத்துக்கனும், 60,000ருவா ஃபீஸ் கட்டனும். காசு குடு"
"தம்பி, நீ MBBS தான படிக்கிற? ஜாவா எதுக்குடா? அது கம்ப்யூட்டர் பசங்க படிக்கிறதாச்சே?"
படிச்ச அப்பா இருந்தா இப்படித் தான் நோண்டுவாங்க போல. நம்மளுக்கும் டூர் போக காசு வேனும், சரி ஒரு புருடா வுட்டுப் பாப்போம்.
"அப்பா, அமெரிக்கால, ஜாவா தெரிஞ்சா தான் MD சீட் கிடைக்குமாம். சுபாக்ஷ் சொன்னான்"
"அவன் MBA ஆச்சே? அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"
"அது....அது....அங்க உள்ள ஒரு மேற்படிப்பு கன்ஸல்ட்டன்ட் இவனோட ஃப்ரென்ட்டாம், அப்படித்தான் தெரிய வந்துதாம்".
"சரி சரி, இந்தா பணம். ஏய் இதென்ன இவ்ளோ மூட்ட முடிச்சு? எங்க கெளம்ப்பிட்ட?"
"நான் மெட்ராஸ்ல போய் ஃப்ரன்ட்டோட தங்கிப் படிக்கப் போறேன்"
"ஏன், இங்க அறந்தாங்கில தான் கம்ப்யூட்டர் சென்டர் இருக்கே. எதுக்கு மெட்ராஸ்லாம் போய்க்கிட்டு?"
"அது வந்து, வந்து....மெட்ராஸ்லேந்து தான அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏற முடியும். அறந்தாங்கிலேந்து முடியுமா?"ன்னு சொல்லிட்டு கேட்டுக்கு வெளியே ஒடிட்டேன்.
"அதுவும் கரெக்ட்டு தான்............என்னது???"
------------------------------------------------------------------------------------------------------------
நான், "மாப்ள, இது என்னடா பச்சையா பெருசா இருக்கு. "
"இதான் டீசல் புல்லட் மச்சி. லிட்டருக்கு 55கிமீ குடுக்கும்".
"டீசல் புல்லட்டா? இதை மார்க்கெட்லேந்து எடுத்தே 15 வருக்ஷம் இருக்குமே".
"ஆமா மச்சி, 1978 மாடல். அந்தப் படத்துல அவங்க 20 வருக்ஷம் பழைய புல்லட்ல தான் போனாங்க. இது ஜஸ்ட் 30 வருக்ஷம் பழசு. அவ்ளோ தான்"
"சரி, இதை இரும்புக் கடைல போடப்போறியா?"
"என்ன கிண்டலா? இதுல தான் இந்தியா பூரா பாக்கப் போறோம்".
"என்னடா லோடு ஆட்டோ கணக்கா லக்கேஜ் தொங்குது?"
"ஆமா மச்சி, டென்ட்டு, சின்ன கேஸ் அடுப்பு, கொஞ்சம் பாத்திரம், அரிசி, பருப்பு பொடி, கம்பளி, தண்ணி, டார்ச் லைட், மஃப்ளர்ல்லாம் இருக்கு".
"நான் எங்கடா உக்கார்ரது?"
"உன் லக்கேஜை முன்னாடி ஹெட்லாம்ப்ல மாட்டு. பின்னாடி ஸ்டெப்னிய மடில வெச்சுக்கிட்டு உக்காரு"
"புல்லட்டுக்கு ஸ்டெப்னியா? சரி போலாம்"
டகடகடகடகடகடக  டமால் டகடக டக......
-----------------------------------------------------------------------------------------------------------
அறந்தாங்கிலேந்து 15 கிமீல பஞ்சர் ஆச்சு.
"மாப்ள, அந்த ஸ்டெப்னிய குடு"
"மச்சி, எனக்கு பயமா இருக்குடா. அதுக்குள்ளயே பஞ்சர். வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவை பூரி கிழங்கு செய்யச் சொல்லி சாப்பிடலாம்"
"பயப்படாதடா....... அய்யய்யோ. ஸ்பேனர் இல்லயே.... சரி அங்க ஒரு வீடு தெரியுது. அங்க கேட்டுப் பாப்போம்"
ரோட்டை விட்டு விலகி இருந்தது ஒரு குடிசை. அங்க நடந்து போனோம்.
"சார், சார்...."
ஒரு 95 வயசு பாட்டி கம்பு ஊனிக்கிட்டு வந்துது."யாரு......."
"பாட்டி .....18-19 ஸ்பானர் இருக்கா?"
"யாரு முத்துப் பாண்டி மவனா? ராசா உன்னப் பாத்து எம்புட்டு நாளாச்சு.... உள்ள வா....சாப்பிடலாம்".
"பாட்டி நான் முத்துப் பாண்டி மவன் இல்ல. ஸ்பானர் இருக்கா? ச்ச. டேய் அல்கேட்ஸ் வா போலாம்"
திரும்பி ரோட்டுக்கு போகும் போது ஒருத்தர் கிடா மீசையோட வழி மறிச்சார்.
"டேய் யார்ரா நீங்க?"
சுபாக்ஷ், பயந்து போய், "சார். நாங்க இப்படிக்கா போகும் போது பாட்டி பஞ்சராயிடிச்சி, ச்ச பயர் டஞ்சராயிடிச்சி, இல்ல டயர் பஞ்சராயிடிச்சி. அதான் ஸ்பானர் இருக்கானு கேக்க வந்தோம்"
"உங்க வண்டியாடா அது? நெறய தட்டு முட்டு சாமான் தொங்குது. இந்த மாதிரி நெறய இடத்துல கைவரிசைய காட்டினீங்களோ? தனியா இருக்குற ஆத்தாவோட காதுல இருக்குற தங்க பாம்படத்த அடிக்க வந்தீங்களா?"
"ஐயோ சார் நாங்க ஒன்னும் திருடல".
"இங்கயே இருங்கடா. அருவாள எடுத்தாரன்"ன்னு வேகமா வீட்டுக்கு போனார்.
நாங்க ஒடிப்போய், டயர மாட்டி நட்டு போட்டு கையாலயே லைட்டா டைட்டு வெச்சிட்டு, வண்டிய எடுத்தோம்".
அந்தாளு அருவா கெடைக்காம கடப்பாறையோட ஓடி வராரு.
"டேய் சுபாக்ஷூ, வேகமா ஓட்டுறா, தொரத்தரான்டா, ஓட்றா"
-------------------------------------------------------------------------------------------------------------
போற வழில ஒரு மெக்கானிக் கிட்ட டைட் வச்சிக்கிட்டு புதுக்கோட்டைக்கு போனோம்.
நான், "மாப்ள, பசிக்குதுறா"
"சரி வா, அந்தக் கடையில போய் பரோட்டா திம்போம்"
நான், "மச்சி பாக்கவே கேவலமா இருக்குடா அந்தக் கடை".
"டேய் இதுக்கே இப்படின்னா, நார்த் போகப் போக ஒன்னுமே இருக்காது. ரோட்ல கூடைல வச்சு ரொட்டியும் வெங்காயமும் வித்துக்கிட்டுருப்பாங்க. இதுவே கெடைக்குதேனு நெனச்சுக்க".
ஆளுக்கு 5 பரோட்டாவும் சால்னாவும் அடிச்சோம்.
சுபாக்ஷ், "மச்சி, வா கோட்டைக்கு போவோம்".
"நான் நெறய தடவை பாத்திருக்கேன்டா"
"டேய் அல்கேட்ஸ், உனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. போற ஒவ்வொரு ஊர்லயும், அங்க உள்ள ஃபேமஸான எடத்தப் பாக்கனும்"
கோட்டை.........
சுபாக்ஷ், "மச்சி இங்க பார்றா கல்வெட்டு".
"நல்லா பாருடா அது லவ்வர்ஸ் கிறுக்கினது"
"ஆமா. தோ இங்க பாரு, கல்வெட்டு. என்ன எழுதியிருக்கான்? சுருபுரி ஸலிகா சிரிமபாடி....."
"டேய் வயித்த கலக்குதுடா. பரோட்டா சரியில்லடா"
"உனக்கு ரசணையே இல்லடா. இங்க பாரு தரையில ஒரு பழங்காலத்துக் கல்லு பளபளன்னு கறுப்பா இருக்கு"னு எடுத்துப் பாத்தான்.
நான், "டேய் அது கழுத சாணிடா. ஒரு வருக்ஷம் கழிச்சு அப்படித் தான் இருக்கும். சரி அந்தப் பேப்பரைக் குடு. யாராவது வராங்களான்னு பாத்துக்க"னு சொல்லிட்டு, பீரங்கிப் பக்கம் போய் ஒக்காந்தா....
செக்யூரிட்டி, "டேய் யார்ரா அது, பீரங்கி பக்கம் ஒதுங்கறது?"
நான் வேகமா பேன்ட்டை மாட்டிக்கிட்டு, "இல்லனா, பீரங்கி சக்கரத்துல என்ன எழுதியிருக்குனு பாத்தேன்".
சுபாக்ஷிடம், "மாப்ள, நான் கோட்டைய சுத்தி அகழி இருக்குமே, அது பக்கமா ஒதுங்கறேன். யாராவது வந்தா சிக்னல் கொடு".
அகழியில் ஒதுங்கினேன். அப்பாடா.
சுபாக்ஷ் நாலு வெள்ளைக்காரங்களோட மதில் சுவர்க் கிட்ட நின்னு பேசிக்கிட்டூந்தான்.
"திஸ் இஸ் அகழி. ஹியர் தான் வாட்டர்ல முதலை இருக்கும். யெஸ் குரொக்கடைல். எனிமிஸ் உள்ள வராம இருக்க. இப்போ நோ வாட்டர்".
வெள்ளைக்காரன் என்ன நோக்கி கையக் காட்டி, "வாட் இஸ் ஹி டுயிங்?"ன்னான்.
"புவர் இந்தியன் ஃபெல்லோ. டூ பாத்ருமிங். நோ ஹவுஸ், யூ சி"ன்னான்.
வெள்ளைக்காரன், என்ன மேலேந்து ஜூம் பண்ணி ஃபோட்டோ புடிச்சான்.
-----------------------------------------------------------------------------------------------------------
மதுரைக்கு போனோம். அடிக்கடி வண்டிய நிப்பாட்டி பாத்ரூம் போனதுல நைட் 10 மணி ஆயிடிச்சி.
அவன் இட்லி சாப்ட்டான். நான் குளுக்கோஸ்ல தண்ணில கரைச்சு குடிச்சேன்.
நான், "மாப்ள எங்கடா தங்குறது?"
"மாப்ள. அங்க ஒரு ப்ளாட் எம்ப்டியா இருக்கு பார். அங்க டெண்ட் போடுவோம்".
"என்னது சிட்டில டென்ட்டா? போற வரவன்லாம் வேடிக்க பாப்பானுங்கடா. ஏதாவது லாட்ஜில தங்கலாம்டா"
"உனக்கு அட்வென்ச்சர் சென்ஸே இல்லடா. அதுக்குத்தான் நைட்டு 12 மனிக்கு மேல டென்ட் அடிப்போம்னேன்"
நைட்டு 12 மணி. இருட்டுல ஒன்னும் தெரியல. அந்த எடத்துல ஒரு மேட்டுல டென்ட் அடிச்சு, அசதில தூங்கியாச்சு. கனவுல கடப்பாறையோட ஒருத்தன் என் பட்டக்ஸைக் குத்த், நான் அலறி அடிச்சுக்கிட்டு எழுந்தா, விடிஞ்சிருச்சி.
வெளிய வந்துப் பாத்தா நாங்க டென்ட் அடிச்ச எடம் ஒரு குப்ப கொட்டுற எடம். எல்லாரும் குப்பைய கொட்டிட்டு, எங்கள ஆன்னு பாக்குறாங்க. ச்சை.
ஒருத்தன் லுங்கியோட வந்தான். பத்துப்பேரு பாத்துக்கிட்டுருந்தானுங்க. சுபாக்ஷும் எழுந்து வந்தான்.
லுங்கி, " டேய், என்னடா இங்க கொட்டா போட்ருக்கீங்க. இது என்னோட எடம். நல்ல ரேட்டு வரும், விக்கலாம்னு பாத்தா நில அப்கரிப்பு பண்ணி, குடிச போடுறீங்களா?"
நான், "சார், சார், சார். இது உங்க எடம்னு தெரியாது. ஒரு அஞ்சு நிமிக்ஷம் டயம் கொடுங்க, கெளம்பிர்றோம்"
"நான் யார் தெரியுமா? மார்க்கெட் அப்புவோட மச்சான்டா. இரு அவர கூப்டுறேன்".
ஐயோ ரவுடியோ? நாங்க டென்ட்டை அவசரமா பிரிக்கப் பாத்தா, அவன் தடுத்தான்.
100 நிமிக்ஷத்துல ஒரு ஸ்கார்ப்பியோ வந்தது அப்பு வந்தான். தடிப்பயல். செம்பட்டைத்தல. மூஞ்சி பூரா அம்மைத் தழும்பு. இன்னொரு நாலு பேரு.
அப்பு, "ஏன்டா, என் மாப்ளையோட எடத்துலயா குடிச போடுறீங்க? நான் யார் தெரியுமா? ஆளுங்கட்சி ரவுடிடா"ன்னு சொல்லிட்டு யாருக்கோ ஃபோனைப் போட்டான். நாலு பேரு சேந்து எங்கள போஸ்ட் மரத்துல கட்டினானுங்க.
நான், "அண்ணே, எங்கள வுட்ருங்கண்ணே. நான் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட். சும்மா ஊர் சுத்திப் பாக்க வந்தோம்".
"வந்து....எங்க எடத்த வளைச்சிப் போடுவீங்களா?"ன்னு பளார்னு ஒரு அறை விட்டான். எல்லாரும் ஏன் என்னை சுத்துறாங்க? ஓ நம்க்கு தான் மயக்கம் வருதோ?
முழிச்சுப் பாத்தா, நான் போலீஸ் ஸ்டேக்ஷன்ல படுத்துருக்கேன். சுபாக்ஷ் மூஞ்சியெல்லாம் வீங்கி, ஜட்டியோட அப்படியே திருட்டுப்பய மாதிரியே குந்திக்கிட்டு யாரையோ உத்துப் பாத்துக் கிட்டுருந்தான்.
"டேய் சுபாக்ஷு"
"க்ஷ்க்ஷ்க்ஷ்...மாப்ள, அப்படியே கிட. முழுச்சிக்கிட்டீனா பின்னிருவாங்க. 2 மணி நேரமா போற வர கான்ஸ்டபிள், ஏட்டு, லேடிஸ் போலீஸ் எல்லாரும் என்னை ஒதைக்கிறாங்க. இப்பத் தான் உங்கப்பாக்கு எஸ்.ஐ ஃபோன் பன்னிருக்காரு". நான் திரும்ப தூங்கிட்டேன்.
ஒரு மணி நேரம் கழிச்சு....அப்பா.
எஸ்.ஐக் கிட்ட ஏதேதோ பேசி எங்கள கூட்டிட்டு போய் கார்ல ஏத்தினாரு.
சுபாக்ஷ், "அங்கிள், என்னோட புல்லட்?"
"உன்னோட புல்லட் தானா அது. வரும் போது பாத்தேன். ஸ்டேக்ஷன் பக்கத்துல சாராய லாரி பக்கத்துல போட்டுருக்காங்க. அதை மறந்துடு".
நான், "எப்படிப்பா அதுக்குள்ள வந்தீங்க?"
"நீ அகழில பாத்ரூம் போன ஃபோட்டோ இன்னிக்கு பேப்பர்ல வந்தது. ஒரு ஃபாரினர், 'இந்தியாவின் சாபக்கேடு'ங்கிற தலைப்பில் போட்ருந்தான். நேத்து நீ போட்ட சட்டை மாதிரியே இருந்துதா, உனக்கு ஃபோன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப். சரின்னு கெளம்பிட்டேன். புதுக்கோட்டைல நான் இருக்கும் போது எஸ்.ஐ ஃபோன் பண்ணினார், இங்க வந்தேன்"
"பணம் எதாவது செலவாச்சாப்பா?"
"எஸ்.ஐக்கு 50,000, அப்புவுக்கு 10,000ம்னு உன் ஜாவா பணத்தை பிரிச்சிக்கிட்டாங்க. ஏன்டா மதுரைக்கு போகனும்னா, என்க்கிட்ட சொல்ல வேண்டியது தான?"
"அங்கிள். இது ஆல் இன்டியா ட்ரிப். புரட்சிக்கான விதைய தூவ, ஒரு பயணம்"னு சுபாக்ஷ், மூக்குல வழிஞ்ச ரத்தத்தை துடைச்சிக்கிட்டே சொன்னான்.

Monday, July 22, 2013

டேய் பிச்சிளம் சிசுடா. கலைச்சிறாதடா...

இன்று, நம்ம க்ளினிக்

"டேய் அல், நான் தான் உன் ஸ்கூல் ஃப்ரென்ட் 'கூ நெடில்' பேசுறேன்".

"டேய் நெடில் மாப்ள, எப்படிடா இருக்க, வொய்ஃப் எப்படி இருக்காங்க?"

"மச்சி ஒரு எமர்ஜென்சிடா. நீதான் ஹெல்ப் பண்ணனும்".

"சரி சொல்லு".

"என் ஆஃபிஸ்ல வேல செய்யிற பொண்ணு ப்ரெக்னன்ட் ஆயிடிச்சிடா. கலைக்கணும்".

"அதுக்கு நீ ஏன்டா டென்க்ஷனாவுற? ஆஃபிஸ்ல வேல பாக்குற பொண்ணு தான.."

"அது வந்து, வந்து....ஹிஹி".

"வழியாத, புரியிது"

-------------------------------------------------------------------------------------------------------------

வருடம், 1962.

என் வாத்தியாரோட அப்பா டாக்டர் பின் குடுமி க்ளினிக்.

பாக்ஷ்யம், "நமஸ்காரம் டாக்டர்".

"நமஸ்காரம். உக்காருங்கோ".

"நன்னாருக்கேளா?"

டாக்டர், "அது நான் கேக்க வேண்டியது. ஆமா ஸ்த்ரீ யாரு? க்ஷோக்கா இருக்கா?"

பாக்ஷ்யம் வெட்கத்துடன், "உங்களுக்கு தெரியாதா டாக்டர் வாள், மழைல நின்னுன்டிருந்தா. பாவம் தொப்பலா நனைஞ்சுட்டா. அப்புறம் வீடு எடுத்துக் குடுத்துட்டேன்".

"ஆத்துக்காரிக்கு தெரியுமா ஒய்?".

"தலைல மண் அள்ளிப் போட்டுடாதேள்".

"ஹஹ. சரி என்னால என்ன கைங்கர்யம் ஆகனும்?"

"அதுல பாருங்கோ, இவ சாம்பலும், புளியும் வேணும்கிறா"

"பேக்ஷ் பேக்ஷ், பாக்ஷ்யம், நீ டக்கர் ஆள் ஒய்"

"சார் வாள். இது நடக்கப்படாது. கலைச்சுரும்".

"பாக்ஷ்யம், ஆண்டவன் கொடுத்ததை மனுக்ஷா எடுக்கப்படாது. நான் ஜெயில்ல இருக்க விரும்பலை. பெத்துக்கோங்கோ".

"வேற வழி ஏதாவது?"

"மருத்துவச்சிக்கிட்ட போகலாம். குச்சில சாணி தடவி வைப்பா, இல்ல உப்புத்தண்ணி ஏத்துவா. உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. பாதி பேர் செத்துடுவா. மழைல நணையக் கூடாதுனு இடம் கொடுத்தோல்லியோ? இப்ப புயல் அடிக்கும் போது நட்டாத்துல விட்றாதேள். பெத்துக்குங்கோ".

------------------------------------------------------------------------------------------------------------

1974, எங்க ஊர் டாக்டர் வில்வாயன் க்ளினிக்.....
"டாக்டர், எம்பொண்டாட்டிக்கு அபார்க்ஷன் பண்ணனும். கலைச்சிருங்க".

"உன் பொண்டாட்டி வயசு என்ன?"

"ஒரு 25 இருக்கும்"

"யாரும் ரேப் பண்ண்லையே?"

"டாக்டர், என்ன சொன்னீங்க.... சீவிருவேன் சீவி"

டாக்டர் வில்வாயன், "அட உக்காருப்பா. 7 வருக்ஷம் போராடி 1971ல தான் அபார்க்ஷனுக்கு சட்டம் கொண்டு வந்தாங்க. அதன் படி 18 வயசுக்கு கீழ கர்ப்பம் ஆனாலோ, ரேப்னால கர்ப்பம் ஆனாலோ, இல்ல கர்ப்பத்தடை வழிகள் ஃபெயிலியர் ஆனாலோ அபார்க்ஷன் செய்யலாம்னு ரூல். கர்ப்பத்தடை யூஸ் பண்ணிருக்கியா?"

"கர்ப்பத்தடைனா? ஆடி மாசமா?"

"கிழிஞ்சுது"

"சாரி டாக்டர், வேற என்ன அடிப்படைல அபார்ட் பண்ணலாம்?"

"கர்ப்பம் கன்டினியூ ஆவறது தாய்க்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துறது, இல்ல வயித்துல இருக்குற குழந்தைக்கு ஊனம் இருந்தாலோ செய்யலாம். அதுவும் 20 வாரத்துக்குள்ள இருந்தா தான்"

"இது எதுவுமே இல்லயே டாக்டர்"

டாக்டர், மனைவியிடம், "உங்க பேரென்ன?"

"என்னவா இருந்தா உனக்கென்ன?"

"என்னயா இப்படிப் பேசுறாங்க?"

" சார், அது அப்படித்தான் பேசும்".

"உன் வயசு என்னம்மா?"

"செருப்பு பிஞ்சிடும் படவா..."

"சூப்பர் ஐடியா. உன் பொண்டாட்டி மனநோயாளினு சொல்லி அபார்ட் பண்ணிடலாம். அது லீகல் தான்"

"அவ மனநோயாளி தான் டாக்டர்"

"அப்புறம் எப்படியா கர்ப்பம்?"

"தெய்வமா தந்தது டாக்டர்"

"சரி சரி, தலைய சொரியாதீங்க"

------------------------------------------------------------------------------------------------------------

எலிப்புழுக்கை ஊர் GH....8 வருடங்களுக்கு முன்.....

"டாக்டர், இவங்க என் வீட்டுக்காரங்க. கர்ப்பமாயிட்டாங்க. அபார்ட் பண்ணனும்".

"ஏதோ கடைல ஆப்பிள் ஜூஸ் வேணும்னு கேக்குற மாதிரி அசால்ட்டா கேக்குறீங்க. சரி அவங்க வயசு என்ன?".

"31"

"மனநலம் எப்படி?"

"டெய்லி திட்டுறா டாக்டர், சில நாள் அடிக்கிறா, சிகரெட் புடிக்க வுடமாட்டேங்குறா. டார்ச்சர் பார்ட்டி. பேசாம மென்டல்னு சொல்லி அபார்ட் பண்ணிடுங்க".

"ஹலோ, அதெல்லாம் நார்மல் தான். எல்லா வீட்டுக்காரங்களும் அப்படித்தான். சரி வீட்ல எத்தனை குழந்தைங்க?"

"5"

"வருமானம்?"

"மாசத்துக்கு 1,200 ருபா டாக்டர்".

"அப்படி இருந்தும் அடங்கமாட்டேன்றீங்களே. சரி உங்க குடும்பத்தில இந்த குழந்தை பொறந்தா, வறுமைனால அதை கவனிக்க முடியாம, குழந்தை பாதிக்கப் படும்னு சொல்லி பண்ணிரலாம்".

----------------------------------------------------------------------------------------------------------

நேற்று.... என் கிளினிக்.....

லைட்டா மீசை மொளச்ச பயன், இப்பத் தான் பரு வர ஆரம்பிக்கிற பொண்ணு.

"டாக்டர், நாங்க இன்ஞ்னியரிங் செகன்ட் இயர். இவளுக்கு அபார்ட் பண்ணனும்".

"என்னாச்சு தம்பி?"

"இத்தன நாள் பாதுகாப்பா இருந்தோம். ஒரே ஒரு தடவை மிஸ்ஸாகிரிச்சு"

அல்கேட்ஸ், சுதாரி. இரக்கப்பட்டு பண்ணிட்டேனு வை, பொண்ணைப் பெத்தவர் வந்தா என்ன செய்யிறது. யோசி....

"இப்ப எத்தன வாரம் ஆவுது?"

"13"

அப்பாடா, "தம்பி, 12 வாரத்துக்கு மேல உள்ள பிரெக்னன்சிக்கு நான் அபார்ட் பண்ண சட்டத்தில வழியில்ல. அதுக்கு பெரிய டாக்டரைத் தான் பாக்கணும். பக்கத்து க்ளினிக்கில் டாக்டர் டரியல் நாதன் இருப்பாரு. போய்ப் பாரு". டாய் டரியல், எனக்கு போட்டியாவா க்ளினிக் நடத்துற...சூப்பர் பேக்ஷன்ட் அனுப்பிருக்கேன். செத்த மவனே. பஞ்சாயத்துக்கு ரெடி ஆவு.

-----------------------------------------------------------------------------------------------------------

இன்று...

நன்பன் 'கூ நெடிலோ'ட ஃபோன்....

"கருவைக் கலைக்க ஒரு மாத்திரை சொல்லுடா அல்"

"மாப்ள நெறய ரூல்ஸ் இருக்குடா"

"ஆமாமா, ஒரு நாளைக்கு லட்சக்கணக்குல அபார்க்ஷன் பண்றீங்க. எல்லாம் ரூலஸ் படித்தான் பண்றீங்களா?"

டாய் ஒசி கிராக்கி, ரூல்ஸா பேசுற, இப்பப் பாரு, ப்ளேட்டை மாத்திப் போடுறேன், "மாப்ள, குழந்தைய எப்படிடா கொல்றது, ப்ச்...அது ஒரு உயிர்டா. பாவம்டா, 8 வாரத்துல இதயம் துடிக்க ஆரம்பிச்சுரும், 10 வாரத்துல கை கால் முளைக்க ஆரம்பிச்சுரும். யோசிடா மச்சான்".

"டேய் சொல்லப் போறியா இல்லயா?"

"மாப்ள, கன்ஃபூசியஸ் என்ன சொல்லிருக்கார்னா, 'கிரிபால்டி பிக்காலோ மாய் மாய், பிம்ப்ளி ஒய் ஒய்'. அப்படின்னா சிசுவை வதைத்தல்......"

 "போடா டேய்"

எஸ்கேப்.

Saturday, July 20, 2013

ஒடும் பஸ்ஸில் ஒரு பைபாஸ் சர்ஜரி

                    நன்றி வல்லமை.com

      நான் பொறந்தோன்ன, ஜோசியர கூப்ட்டாங்க. அவரு சொன்னாரு "இவனுக்கு சனி. நாக்குல ஜென்ம சனி"ன்னு.

     எனக்கு 18 வயசு இருக்கும் போது, அம்மா, "இவங்கப்பா ஊர்ல பெரும் புள்ளியா இருந்தாரு. இவன் நாக்குல கரும்புள்ளியோட சுத்தறான். ஐயோ"ன்னு தலைல அடிச்சுக்கிட்டாங்க.

       நம்ம வாய் திறந்தா அங்க சண்டை வந்துடும், பங்காளிங்க பிரிஞ்சுடுவாங்க, தலாக் நடக்கும், வீடு எரியும், இல்ல ஊர்க் கலவரம் கூட ஆகும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Medical college- சேர்ந்த 18ஆவது நாள்....

    நம்ம கிராம்த்துலேந்து தினமும் காலேஜுக்கு பஸ் தான். இப்போ ஊரில எல்லாரும் நான் 'கோட்'டை தோள்ல தொங்கப் போட்டுட்டு போறத பாத்துட்டதுனால, எனக்கும் அலுத்துப்போச்சு. கோட்டை பைக்குள்ளேயே வச்சு தூக்கிட்டுக் கிளம்பிடுவேன்.

       பஸ்ல போகும் போதும் படிப்பேன், திரும்பி வரும் போதும் படிப்பேன். அப்போ நிறைய பேரு, நான் என்ன படிக்கிறேன்னு எட்டிப்பாபாங்க. நம்ம அனாடமி புக்ல தான் எலும்பு, சதை, தசைன்னு வெளிப்படையாவே படங்கள் இருக்குமே. அதைப் பாத்துட்டு வேற பக்கம் போயிடுவாங்க. நைட்ல அவங்களை எலும்பு மனிதன் அட்டாக் பண்ற மாதிரி கனவெல்லாம் வருமாயிருக்கும்.

    ஒரு நாள், என் புக்கை எட்டிப் பாத்து ஒருத்தர் பஸ்லையே மயங்கிட்டார். சோடாவுக்கு என்கிட்டயே காசு புடுங்கிட்டாங்க. அப்புறம் கண்டக்டர் வந்து, "தம்பி, நீங்க டாக்டருக்கு படிக்கிறீங்க, பெரிய விக்ஷயம் தான். அதுக்காக எவனாவது பஸ்ல மண்டையப் போட்டான்னா, என் வேலை போயிரும். தயவு செஞ்சு இனிமே நம்ம பஸ்ல படிக்காதீங்க தம்பி" ன்னாரு. ஸ்டார்ட்டிங்ல அவரும் எட்டிப்பாத்துருக்காரு. அப்புறம் 3 நாள் ஜீரம். இப்ப தான் திரும்ப டூட்டில ஜாயின் பண்ணினார். கனவுல அவருக்கு சதை மனிதன், எலும்பு மனிதனோட தொடை எலும்பைக் கடன்வாங்கிட்டு அத தூக்கிட்டு அவரை தொறத்துற மாதிரி வந்துருக்குமோ?

  சரின்னு அவர் குடும்பம் குட்டியெல்லாம் நெனச்சுப் பாத்து, அன்னைலேந்து பஸ்ல புக்க எடுக்காம நோட்ஸ் மட்டும் படிச்சேன்.

  ஒரு நாள், ஒருத்தர் நான் படிக்கிறதைப் பாத்துட்டு, "தம்பி. என்ன படிச்சாவுது?"ன்னார்.
       
     சிக்கிட்டான். "நான் டாக்டருக்கு படிக்கிறேன்"னேன்.

     "அப்படியா! பரவாயில்லயே. எங்க படிக்கிறீங்க?"

      "எலிப்புழுக்கை ஊருல"

    "என்ன சொல்றீங்க. அங்க மாட்டு டாக்டர் பள்ளிக்கூடம் தானே இருக்கு. ஓஹோ. மாட்டு டாக்டர் படிச்சவங்களும் டாக்டர் தானே! சரி தம்பி, நம்ப கிடேறி ஆட்டுக்கு 2 நாளா பேதி. மருந்து சீட்டு எழுதி கொடுங்களேன்"ன்னு கேப்பு விடாம பேசினார்.

   "ஐயா. நான் மனுச டாக்டருக்குத் தான் படிக்கிறேன். எலிப்புழுக்கைல நாலு வருக்ஷமா மெடிக்கல் காலேஜ் இருக்கு"ன்னேன் கோவமா.இருக்காதா பின்ன. வெட்னரி சைன்ஸ், என் 12 வது மார்க்குக்கே கெடச்சுது. MBBSக்காக் தான் யூரியா சாக்குல பணத்தை கொண்டாந்து கட்டினோம்?

     "ஹிஹி, வேகப்படாதீங்க தம்பி, ஹிஹி"

      "சரி" என்று நோட்ஸைப் பாத்தேன். (ulna and radius are the two bones in forearm. the muscles of forearm are .............)

        "டாக்டர் தம்பி..."

   நானா? டாக்டரா? அப்படியே உச்சி வெயில்ல ஜில்லுனு லஸ்ஸி அடிச்ச மாதிரி இருந்தது.

      "க்கும். சொல்லுங்க"

     "நமக்கு ஒரு 6 மாசமா வலது தோள்பட்டைல வலி. கொஞ்சம் என்னானு பாருங்களேன்".

 என்னது, அதுக்குள்ள பேக்ஷன்ட்டா? காலேஜ் சேந்தே 2 வாரம் தான் ஆவுது. இப்ப தான் கொஞ்ச நாளா டெட்பாடிக்கிட்ட நிக்கவே தைரியம் வந்துருக்கு. சரி என்னான்னு பாப்போம்

   "எங்க வலிக்குது?"

  அவர் திரும்பி, "இங்க தான் தம்பி"ன்னார்.

 ஒகே. தோள் பட்டை. க்ஷோல்டர். அங்க என்னா இருக்கு? ம்ம்ம் டெல்டாய்ட் மசிள் (மசிள்னா தசை. அது 2 எலும்புல அட்டாச் ஆயிருக்கும். அதால தான் நாம அசையவோ, நடக்கவோ, எழுதவோ முடியுது).

   "ஒகே. உங்களுக்கு டெல்டாய்ட் மசிள்ல வலிக்குது"

   "பாலிடாலா? அது 20 வருக்ஷம் முன்னாடி பொண்டாட்டி ஒடிப்போனப்போ குடிச்சது. அது சரியாயிட்டு தம்பி"

  ஒகே. டெல்டாய்ட் மசிளுக்கு ரத்தம் கொடுக்குறது, ஆக்ஸிலரி ஆர்ட்டரி, நெர்வ் சப்ளை (மூளைலேந்து நரம்பு) என்னவாயிருக்கும்??

     "ஒரு நிமிக்ஷம், பாத்துட்டு சொல்றேன்"

  அவர், (தம்பி என்னாத்த பாக்கப் போவுது? ஏ யப்பா, இவ்ளோ பெரிய புத்தகத்த எடுக்குறாரே? நமக்கு புத்து நோயோ?)

   ஒகே. ம்ம்ம்ம். ஒகே. டெல்டாய்ட் மசிள் இஸ் சப்ளைட் பை மீடியன் நெர்வ் (Deltoid muscle is supplied by median nerve). மீடியன் நெர்வ் எங்கேந்து வருது? ஸ்பைனல் கார்ட் (தண்டுவடம்). ஸ்பைனல் கார்ட் எங்கேந்து வருது? மூளைலேந்தா. சரி தான். சொல்லிருவோம்.

    "இங்க பாருங்க", நோட்டில் பேனாவை எடுத்து வரைந்து காட்டினேன். "இதான் தோள்பட்டை, இதான் டெல்டாய்ட் மசிள், இது அதோட நெர்வ். மூளைலேந்து வருது".

    அவருக்கு வேர்க்க ஆரம்பிச்சுது.

     "இதுல எங்க வேணா ப்ராப்ளம் இருக்கலாம், தசை, இல்லாட்டி ரத்தக் கொழா, இல்ல தண்டுவடமோ, ஏன் மூளைல கூட இருக்கலாம்"

    அவர் கண்கள் போண்டா போல விரிஞ்சுது. வாய் ஆன்னு பொளந்துக் கெடக்கு.

          "இதுல பாருங்க, மூளைல செரிப்ரம்...."

          "எலிப்புழுக்கைல்லாம் எறங்கு"ன்னு கண்டக்டர் கத்தினார்.

  "அய்யோ. என் ஸ்டாப் வந்திரிச்சி. வரேங்க" என ஒடிப்போய் எறங்கிட்டேன்.

   பஸ் என்னைத் தாண்டிப் போவுது. பஸ் ஜன்னல்ல பாத்தா, அவரு கைகளால தலய புடிச்சுக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டுருக்காரு.
---------------------------------------------------------------------------------------------------------------------------

நாலு நாள் கழிச்சி.....

         வீட்டுக்குப் போக பஸ் ஏறப் போனேன்.

        "டாக்டர் தம்பி"ன்னு சத்தமா ஒருத்தர் கூப்ட்டாரு.

    அட இவரு நம்ம மொத பேக்ஷன்ட் ஆச்சே.

         "வாங்க. எப்படி இருக்கீங்க?"ன்னேன்.

   ஆள் மூனு நாள் தாடியோட, ஒரு அஞ்சு கிலோ கொறஞ்சிருந்தாரு. "தம்பி, நல்லாயிருக்கீங்களா? வாங்க டீக்குடிச்சிக்கிட்டே பேசுவோம்"ன்னு சோகமா கூப்ட்டாரு.

  ஹையா, ரொம்ப நாளா அந்தக் கடையில சூடா பக்கோடா சாப்பிடணும்னு ஆசை. நம்ம பாக்கெட் மணி அதுக்கு எடம் கொடுக்காது.

       2 ப்ளேட் பக்கோடா, 1 ப்ளேட் வாழைக்கா பஜ்ஜிய நானே முடிச்சேன். அவரு அப்படியே வீடு எரிஞ்சு போன மாதிரி என்ன சோகமா பாத்துட்டிருந்தாரு.

          "தம்பி. அன்னைக்கு பாதில உட்டுட்டீங்க"

           "ஆங். ஆமா. எங்க விட்டேன்?"

          "மூளைல செரிமானம்னு முடிச்சீங்க"

   "செரிப்ரம். இருங்க புக்கைப் பாக்குறேன்" என்று பையிலேந்து, ஒரு தலகாணி புக்க எடுத்தேன் (இது ரெஃப்ரன்ஸ் புக், 2300 பக்கம்).

    அவர் அப்படியே டெரராகி, பெஞ்ச்ல ஓரமா உக்காந்துட்டார். 

   நமக்கு இருந்த வியாதி முத்திருச்சு போல. இவ்ளோ பெரிய புக்க பாக்குறாரே..

   நான் படிச்சுக் காட்டினேன், "arm is supplied by axillary artery, which is a branch of subclavian artery, originating from arch of aorta, which starts from heart. இதுல என்ன சொல்லுதுன்னா, இதயத்துலேந்து அங்க ஒரு ரத்தக் கொழா வருது. அங்க கூட பிரச்சினை இருக்கலாம்".

       "ஐயோ, என்ன சொல்ல வரீங்க?"

   "பிரச்சினை கைலேயும் இருக்கலாம், இல்ல தண்டு வடத்திலேயோ, இல்ல மூளை, இதயத்துல கூட இருக்கலாம்"

    "புத்து நோயோ?"

   "அட எனக்கே தோணல, நீங்க சொல்லிட்டீங்க. அதா கூட இருக்கலாம். மூளைல, செரிப்ரம், செரிபெல்லம்....அய்யோ, பஸ்சை எடுத்திட்டான்" என்று வேகமாக ஓடி, ஒடற பஸ்ல தொத்திக்கிட்டு போயே போயிட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
   காலேஜில் ஜில்லாக்கு மண்டைன்னு ஒரு சீனியர். அவருக்கிட்ட போய், "அண்ணா, தோள் பட்டைல வலின்னா என்னவாயிருக்கும்"ன்னேன்.

  அவரு, தலைய சொரிஞ்சுக்கிட்டே, என்னை ஒரு ஃபைனல் இயர் பெரிய சீனியர் கிட்ட கூட்டிட்டு போனாரு.

  பெரிய சீனியர், "வாடா ஜில்லாக்கு மண்டை, இவன் யார்றா?"

 ஜில்லாக்கு, "அண்ணா இவன் புதுசா வந்துருக்குற ஜுனியர். ஸ்கூல்லயே தெரியும்".

  என்ன பாத்தாரு, "என்னடா?"

 எனக்கு கைக்கால் ஒதற ஆரம்பிச்சுது. "அண்ணா, என்க்கிட்ட ஒரு பேக்ஷன்ட் வந்தாரு"

  "அடிங்ங். வந்து ஒரு மாசம் கூட ஆவல, அதுக்குள்ள கடை விரிச்சிட்டியா?" ன்னு செல்லமா தட்டினாரு. நான் டேபிள் மேல போய் விழுந்தேன்.

   எழுந்து, "இல்லணா, க்ஷோல்டர்ல வலியாம், பஸ்ட்டாண்ட்ல வச்சி மறிக்கிறாரு"

   "என்ன வயசு?"

   "நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். விவசாயி"

  "அட, எதையாவது வெயிட்டா தூக்கிருப்பாரு. இந்தா, இந்த சீட்டுல ஒரு ஆயின்ட்மென்ட்டும் ஒரு மாத்திரையும் எழுதியிருக்கேன். போடச் சொல்லு. 4 நாள்ல சரியாயிடும்"

   நான் தயங்கியபடி, "அண்ணா, மூளை, இதய பிரச்சினை இருக்காதா?"

  "யார்ரா இவன். மாமரத்துல கொய்யாக்கா காய்க்குமா? இனிமே இப்படில்லாம் கடை விரிச்ச, குடல வாய் வழியா வெளிய இழுத்திருவேன். போடா, ஓடு..."

  அப்படியே பைய தூக்கிக்கிட்டு, ரெண்டு கிலோ மீட்டர் ஒடியே பஸ்டாண்டுக்கு வந்துட்டேன். அடிவாங்காம தப்பிச்சோம்டா சாமி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பத்து நாள் கழிச்சு.....

    "டாக்டர் தம்பி"

   ஆஹா. பெரியவரே உங்களுக்கு ஒன்னுமில்லன்னு சொல்ல நெனச்சு திரும்பினா...

  மூனு குண்டர்கள் அவர் பக்கத்துல. அப்படியே அடிவயத்துல கிறுகிறுங்குது. அவர் பைனஞ்சு கிலோ எடை கொறஞ்சிருந்தார்.

   "தம்பி, எனக்கு மூளைப்புத்து நோய்ன்னு, அன்னைக்கு நீங்க சொன்னிங்க இல்ல. அதே தான் தம்பி. பாருங்க வெயிட் எவ்ளோ குறைஞ்சிடிச்சி. எட்டு வயசுல போட்ட சட்டை இப்போ கொள்ளுது தம்பி. இவங்க நம்ம பசங்க. கருவண்டு, சில்வண்டு, டைனோசார்"

   "என்னது, டைனோசாரா?" ந்னு இரண்டு ஸ்டெப் பின்வாங்கினேன். இன்னும் ஒரு ஸ்டெப் வச்சிருந்தேன்னா, சாக்கடை.

    "ஆமா தம்பி. பொண்வண்டுன்னு தான் வெச்சேன். ஆனா பய, வீட்ல உள்ள எல்லாத்தையும் முழுங்க ஆரம்பிச்சுட்டான். சும்மா டேபிள் சேரையெல்லாம் கடிச்சே சாப்புடுவான்"ன்னு நாய்க்கு தலைய தடவற மாதிரி, அவன் தலைய தடவினார். "இப்போ கூட வீட்ல இருந்த புல்லட் வண்டிய கொஞ்சம் கொஞ்சமா சாப்ட்டுகிட்டுருக்கான். அதான் டைனோசார்னு பேரு".

   அவன் பல்லு கொஞ்சம் கூரா இருக்கோ? அய்யய்யோ....இவனுங்க நம்மளை அடிக்கவே வேணாம். ரெண்டு பேருக்கு நடுவில நம்மள நிக்க வெச்சு கட்டிப்புடிச்சாலே போதும். தொண்டை காது வழியா வந்துடும், மூளை மூக்கு வழியா வந்துரும்.
  பெரியவர், எடை குறைஞ்சிருந்தாலும், நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தார்., "தம்பி. ஒரு வாரமா தூங்கல. அப்புறம் யோசிச்சு பாத்தேன். அட பொறந்த எல்லாரும் ஒருநாள் சாவ வேண்டியது தான. என்ன நமக்கு கொஞ்சம் முன்னாடியே சாவு வரப்போவுது. அவ்ளோ தான்"

  நான், "சார். நான் பெரிய டாக்டர்க்கிட்ட கேட்டேன். உங்களுக்கு ஒன்னுமி..."

   அவர் மறித்து, "உங்கள விட பெரிய டாக்டர் யார் இருக்கா தம்பி. நம்ம கதைய தான் அந்த தலகாணி புக்ல படிச்சீங்களே. சரி விடுங்க. நம்ம செல்லப் பயலுங்க, உங்கக் கிட்ட பேசணுமாம். மூனு நாளா இந்த பஸ்ட்டாண்ட்ல சுத்திக்கிட்டு இருக்கோம். வேற ஸ்டாப்ல ஏறீட்டீங்களோ. ஹஹ பரவால்ல".

   தானாகவே எச்சில் விழுங்கினேன். இந்த நேரம் பாத்து, தொண்டை வரண்டுடிச்சி. வலியோட முழுங்கினேன்.

  கருவண்டு கரகரப்பான குரலில், "டாக்டர் தம்பி"ன்னான். அவனை அண்ணாந்து மேல பாத்தேன். யம்மா...பஸ்ல மூனு பேர் சீட்ல இவன் ஒருத்தனே ஒக்காந்தாலும் பத்தாதே. தல வேற இடிக்குமே. திரும்பயும் வலியோட எச்சில் முழுங்கல். அவன், "அப்பாக்கு மூளைல புத்து நோயா?"ன்னான்.

    "இ..இ..இல்லீங்க. அவருக்கு ஒஒ ஒன்னுமில்ல"
 
    பெரியவர் நெஞ்சை விரைத்துக் கொண்டு, "தம்பி, உண்மைய சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க? புத்து நோய்ன்னு தைரியமா சொல்லுங்க தம்பி"

    நான் கருவண்டைப் பாத்து, "இல்லீங்க அண்ணா. அவரு..."

    பெரிசு, "அட தம்பி கிழிஞ்ச ஊரு போலருக்கு. அங்க தான் வெளங்காத சாக்கு மூட்டைப் பயலுவோல அண்ணாம்பாங்க".

  "அதெல்லாம் இல்லைங்கண்ணா". மூதேவி பெருசு, கரெக்ட்டா ஊர் பேரைக் கண்டு புடிச்சிட்டாரே. ஐயோ, என்ன பண்ணுவேன்.

   கருவண்டு கண்கள் சிவந்து சத்தமா, "தம்பி, அப்பாக்கு புத்து நோயா இல்லையா?" என்ற படி பின் சட்டைக் காலரை தொட்டான்.

  "இல்ல. ஆமா. இல்ல." அவன் கையை பின்னாடிலேந்து, லைட்டா தலைக்கு மேல எடுத்தான். கைப்பிடி தெரிஞ்சுது.

   "ஆமா அவருக்கு மூளைப் புத்துநோய்"ன்னு கத்தினேன். பேண்ட் ஏதோ ஒரு காரணத்துனால நனைஞ்சுது.  

        கருவண்டு கைப்புடிய பழயபடி உள்ள எறக்கினான். மூனு பேரும் முட்டிப் போட்டு என் கையப் புடிச்சாங்க. "நன்றி தம்பி". பெரிசு இப்போ நாலு கிலோ கூடின மாதிரி என்னைப் பெருமையா பாத்தார்.

அவர், "நீங்க சொன்ன உடனேயே உயில் எழுதிட்டேன் தம்பி. இவனுங்க நான் சாகப் போறத நம்பாம நேர்ல தெரிஞ்சுக்கிட்டாத் தான் நம்புவோம்னு அடம் புடிச்சாங்க. அதான்".

"சரி சரி", ஐயோ நான் நினைக்காமலேயே வாய்லேந்து தானா வார்த்தை வருதே.

"வரோம் தம்பி, இந்தாங்க ஃபீஸ். பத்து ருபாய்"

----------------------------------------------------------------------------------------------------------------------------

15 வருக்ஷம் கழிச்சு....

சரி, அவருக்கு என்னாச்சுன்னு கேக்கறீங்களா. அடப் போங்க பாஸு. நான் இன்னிக்கும் எலிப்புழுக்கை ஊருக்கு போறதுன்னா, சொரிப்பேட்டைக்கு பஸ் புடிச்சி, 30 கிலோமீட்டர் சுத்தி, எலிப்புழுக்கை பஸ்ட்டாண்டுல பஸ் நுழையறதுக்கு முன்னால, ஒடுற பஸ்லேந்து எறங்கி ஒடுவேன். நீங்க வேற.